தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பில் நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னை இடம்பெறுமா?  எதிர்பார்ப்பில் விவசாயிகள்

தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இரு மாநில
தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பில் நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னை இடம்பெறுமா?  எதிர்பார்ப்பில் விவசாயிகள்

தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இரு மாநில முதல்வர்கள் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இதில் குமரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னையான நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னையும்  இடம்பெற்று தீர்வு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு குமரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தின் விளவங்கோடு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளும், கேரளத்தின் நெய்யாற்றின்கரை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளும் பயன்பெறும் வகையில் கேரள பகுதியில் நெய்யாறு இடதுகரை கால்வாய் கட்டப்பட்டது. தமிழக பகுதிகள் பாசன வசதி பெற நெய்யாறு இடதுகரை கால்வாய் அமைக்கப்பட்டு 1963 ஆம் ஆண்டு முதல் இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
40 ஆண்டுகள் எந்தவித தடையுமின்றி தமிழகத்துக்கு கிடைத்து வந்த தண்ணீரை கேரள அரசு 2004 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தியது. 2003 ஆம் ஆண்டு கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் உம்மன்சாண்டி ஆட்சிக் காலத்தில், கேரளத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாமல் தண்ணீர் தரக்கூடாது என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் கொண்டு வந்த கேரள நீர்ப்பாசனம் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 
 இக் கால்வாய் மூலம் பாசனத்துக்கு பயன்பட்டு வந்த களியக்காவிளை பேரூராட்சியில் 23 குளங்கள் உள்பட 200 க்கும் மேற்பட்ட குளங்கள் முற்றிலும் வறண்டதுடன் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இப் பிரச்னையை கையிலெடுத்து பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், இப் பிரச்னைக்கு உரிய முடிவு காணப்படாத நிலையே தொடர்கிறது. 
இந்த நிலையில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நீர்பாசன திட்டங்கள் குறித்து இரு மாநில முதல்வர்களும்  19 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்  பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் குமரி மேற்கு மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னையான நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னை இடம்பெற வேண்டும்  என இங்குள்ள விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் கூறியது,
1963 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரும், கேரள முதல்வர் சங்கரும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் விளவங்கோடு, கிள்ளியூர் வட்டத்தைச் சேர்ந்த மக்கள் பயன்பெற்று வந்தனர். 
இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியது. கேரள அரசு இக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி 15 ஆண்டுகள்தாண்டிய நிலையில் இப்பகுதி விவசாயிகள், அரசியல் கட்சியினர் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் நெய்யாறு கால்வாய் பிரச்னை குறித்த வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என தமிழக அரசு கருதுவது சரியான முடிவல்ல. இப் பிரச்னை இம் மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னை. இருமாநில நதிநீர் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னையும் இடம் பெற வேண்டும்.
19 ஆண்டுகளுக்குப் பின் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்னை குறித்து நிச்சயமாக தமிழக முதல்வர் கேரள முதல்வருடன் பேச வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இக் கால்வாயில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com