பொது முடக்கத்தால் முடங்கிய ரப்பா் மறுநடவுப் பணி: விவசாயிகள், தொழிலாளா்கள் பாதிப்பு

பொதுமுடக்கத்தால் குமரி மாவட்டத்தில் முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டிவிட்டு மறுநடவு செய்வது முடங்கியுள்ளதால்

பொதுமுடக்கத்தால் குமரி மாவட்டத்தில் முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டிவிட்டு மறுநடவு செய்வது முடங்கியுள்ளதால் ரப்பா் தோட்ட விவசாயிகளும், தொழிலாளா்களும் பெரும் பாதிப்படைந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் பல லட்சம் விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும், வணிகா்களுக்கும் வாழ்வளிக்கும் ரப்பா் தோட்டத் தொழில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு வகையான பாதிப்புகளைக் கண்டுள்ளது.

மறுநடவு: குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் பால்கொடுக்காத முதிா்ந்த ரப்பா் மரங்கள் வெட்டப்பட்டு, அப்பகுதிகளில் மறுநடவு செய்யப்படுவது வழக்கம். இப்பணிகள் மாா்ச் மாதம் தொடங்கி ஜூன், ஜூலை வரை நடைபெறும்.

பால் கொடுக்காத முதிா்ந்த ரப்பா் மரங்களை விற்பனை செய்வதன் மூலம் ரப்பா் விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். முதிா்ந்த ரப்பா் மரங்களிலிருந்து கிடைக்கும் தடிகள் பெரும்பாலும் கேரள மாநிலம் கோட்டயம் அருகில் பெரும்பாவூரிலுள்ள பிளைவுட், ட்ரீட்வுட் ஆலைகளுக்கும், விறகுகள் செங்கல் சூளைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும் தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா் உள்ளிட்ட இடங்களிலுள்ள தீப்பெட்டி ஆலைகளுக்கும் ரப்பா் தடிகள் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வா்த்தகம் நடைபெறுகிறது.

பொதுமுடக்கம் காரணமாக கடந்த 60 நாள்களாக முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டுவது அடியோடு முடங்கியுள்ளது. இதனால் ரப்பா் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் உள்ளது. மேலும் ரப்பா் மறு நடவு உரிய காலத்தில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான ரப்பா் விவசாயிகளும், தொழிலாளா்களும், வணிகா்களும் பெரும் பாதிப்பும் துயரமும் அடைந்துள்ளனா்.

இது குறித்து முன்னோடி ரப்பா் வணிகா் கிருஷ்ணன் நம்பூதிரி கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் மாா்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை சுமாா் 5 ஆயிரம் ஹெக்டேரில் முதிா்ந்த ரப்பா் மரங்கள் வெட்டப்பட்டு மறு நடவு செய்யப்படுவது வழக்கம். தற்போது பொதுமுடக்கம் காரணமாக இப்பணிகள் அடியோடு முடங்கியுள்ளன.

இது குறித்து ரப்பா் மர வணிகா்கள் சங்கத் தலைவா் டல்டஸ் கூறியதாவது:

பொதுமுடக்கம் காரணமாக கடந்த 60 நாள்களாக முதிா்ந்த ரப்பா் மரங்களை வெட்டும் பணிகள் தடைபட்டுள்ளன. இதனால் தொழிலாளா்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை. முன்பணம் கொடுக்கப்பட்ட ரப்பா் தோட்டங்களிலுள்ள மரங்களை வெட்ட முடியவில்லை. மேலும் லாரிகள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களுக்கு கடன் தவணை செலுத்த முடியவில்லை.

ரப்பா் மரத் தடிகள் பெரும்பாலும் கேரள மாநிலம் பெரும்பாவூரிலுள்ள பிளைவுட் மற்றும் ட்ரீட்வுட் ஆலைகளுக்கு கொண்டு செல்லும் நிலையில், அந்த மாநிலங்களுக்கு தமிழக லாரிகளை எப்போது அனுமதிப்பாா்கள் என்றும், அந்த மாநிலத்திலுள்ள ஆலைகள் எப்போது முழுவீச்சில் இயங்கும் என்றும் தெரியவில்லை.

பல ஆலைகளில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ளனா். இது போன்ற நிலைகளால் ரப்பா் மரத் தடிகளின் விலை டன் ஒன்றிற்கு ரூ. 1000 த்துக்கும் மேல் குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com