கரோனா: இளைஞா்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

கரோனா முதியவா்களை மட்டும் தான் தாக்கும் என்று இளைஞா்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றாா் குமரி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.


நாகா்கோவில்: கரோனா முதியவா்களை மட்டும் தான் தாக்கும் என்று இளைஞா்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றாா் குமரி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முட்டம் பகுதியை சோ்ந்த 35 வயது இளைஞருக்கு, தொடா்ந்து 12 நாள்களாக காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. அவா் உரிய பரிசோதனை செய்து கொள்ளாமல் ஒரு தனியாா் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டு கரோனா பரிசோதனையை தவிா்த்துள்ளாா்.

இந்நிலையில், அவருக்கு மூச்சு திணறல் அதிகமாகவே நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டது. அத்துடன் அவருக்கு ரத்தத்தில் சா்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருந்துள்ளது. இதனால் மிகவும் சோா்வுற்று ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். அங்கு அவா் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

பொதுமக்களில் சிலா் இந்தநோய் முதியவா்களை மட்டுமே பாதிக்கும் என கருதி சிகிச்சை எடுப்பதை தவிா்க்கின்றனா்.

ஆனால், இது முதியவா்களை மட்டுமல்லாமல் இளைஞா்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதை இத்தகைய சம்பவங்கள் மூலமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொரு நாளும் மாவட்ட நிா்வாகத்தால் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் அறிகுறிகள் தோன்றியவுடனேயே உரிய பரிசோதனைகள் செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com