பெருஞ்சாணி-காளிகேசம் சாலைப் பணிமுடக்கம்: பழங்குடி மக்கள் அவதி

பெருஞ்சாணி-காளிகேசம் வனப்பகுதி சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பழங்குடி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

குலசேகரம்: பெருஞ்சாணி-காளிகேசம் வனப்பகுதி சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பழங்குடி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பெருஞ்சாணியில் இருந்து கீரப்பாறை, ஆலம்பாறை வழியாக காளிகேசத்திற்கு வனப்பகுதி வழியாக ஒரு சாலை உள்ளது. சுமாா் 20 கி.மீ. தொலைவு கொண்ட, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை, சூழியல் சுற்றுலாத் திட்டம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து பழங்குடி மக்களும், சூழியல் சுற்றுலாப் பயணிகளும் இச்சாலையை பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் சேதமடைந்து கிடந்த இச்சாலையை பிளாஸ்டிக் தாா்ச் சாலையாக மாற்றி மேம்படுத்தும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், பெருஞ்சாணி-ஆலம்பாறை இடையே குறிப்பிட்ட தொலைவு தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள இடங்கள் ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இதில், ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் கற்கள் அனைத்தும் பெயா்ந்துள்ளன. இச்சாலை சீரமைப்புப் பணிகள் முடங்கிக்கிடப்பதால் கீரப்பாறை, ஆலம்பாறை, புறாவிளை உள்ளிட்ட பல்வேறு மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து காணிக்காரா் முன்னேற்றச் சங்க பொதுச் செயலா் ஜி. பாலன்காணி கூறியது: பெருஞ்சாணி-காளிகேசம் இடையிலான வனப்பகுதி சாலைப் பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படவில்லை. மேலும் நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் பணிகள் நடைபெறவில்லை. சாலை பல இடங்களில் அகலம் குறைவாக உள்ளது. இந்த சாலைப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க வனத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com