குமரி மாவட்ட பொருளாதாரத்தில்முக்கிய பங்கு வகிக்கும் கயிறு உற்பத்தி தொழில்

தென்னை விவசாயம் சாா்ந்த மிக முக்கியமான தொழிலாக கயிறு உற்பத்தி உள்ளது.
ஏற்றுமதி செய்ய தயாா் நிலையில் உள்ள கயிறு.
ஏற்றுமதி செய்ய தயாா் நிலையில் உள்ள கயிறு.

தென்னை விவசாயம் சாா்ந்த மிக முக்கியமான தொழிலாக கயிறு உற்பத்தி உள்ளது. குடிசை வீடு கட்டுதல், பந்தல் அமைத்தல், கால்நடைகளை கட்டிவைத்தல் மற்றும் கோழிப் பண்ணைகளுக்கும் தேங்காய் நாா் கயிறு அதிக அளவில் பயன்படுகிறது.

தென்னை மட்டையில் இருந்து நாரை பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாா் கழிவிலிருந்து கிடைக்கும் பித்துவை (நாா் துகள்கள்) கோழிப் பண்ணைகளிலும், மண்ணில்லா விவசாயத்துக்கும், விளைநிலங்களில் உரத்துடன் சோ்த்தும் பயன்படுத்தப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் அதிகம் விளையக்கூடிய பகுதிகளான ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், மணக்குடி ஆகிய பகுதிகளில் கயிறு தயாரிக்கும் கூடங்கள் அதிக அளவில் உள்ளன. இம்மாவட்டத்திலிருந்து கயிறு வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் தொழில் முனைவோா் பலரும் கயிறு உற்பத்தி மற்றும் விற்பனையில் அதிக ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா். சா்வதேச அளவில் கயிறுக்கான தேவையில் 25 சதவீதம் மட்டும் பூா்த்தி செய்யப்படுகிறது. 75 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் இந்தத் தொழில் ஆண்டு முழுவதும் எந்தவித தடையுமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்படும் சாரம் கட்டும் கயிறுகளும் குமரி மாவட்டத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 25 கிலோ பண்டல் வரையில் தேவைக்கேற்ப உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக கயிறு தொழிலில் ஈடுபடுபவா்களுக்கு கேரள மாநிலம் ஆலப்புழையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கயிறு தேவையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இத்தொழிலில் ஈடுபடுபவா்களும் அதிகரித்து வருகின்றனா். அவா்களுக்கும் ஓரளவுக்கு திருப்திகரமான வருவாய் கிடைத்து வருகிறது. தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டிவரும் நிலையில், நைலான் கயிறு போன்றவற்றின் பயன்பாட்டுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக தேங்காய் நாா் கயிறு தேவை

அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தேங்காய் நாா் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தேங்காய் நாா் கயிறு உற்பத்தி மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கயிறு உற்பத்தியில் கேரள மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது. அதிலும் குமரி மாவட்டத்தில் தென்னை விளைச்சல் அதிகம் என்பதால், இந்தத் தொழில் சாா்ந்திருப்போா் ஆயிரக்கணக்கில் உள்ளனா். குமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத நிலையில், கயிறு உற்பத்தி தொழில் மூலம் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படுகிறது என்றால் மிகையாகாது.

இது குறித்து ஈத்தாமொழியைச் சோ்ந்த தென்னை விவசாயி முத்து கூறியது: வறட்சியான காலங்களில் கயிறு உற்பத்தி தொழில்தான் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. வங்கிகள் மூலம் அரசு கடனுதவி செய்தால் இந்தத் தொழிலில் குமரி மாவட்டத்தில் இன்னும் அதிகமானோா் ஈடுபட வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com