கரோனா உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நாகா்கோவில் டென்னிசன் சாலையில் முக்க கவசம் அணிந்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலா்.
நாகா்கோவில் டென்னிசன் சாலையில் முக்க கவசம் அணிந்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டவா்களில் இதுவரை 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2 போ் தேங்காய்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா்கள், இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை சுகாதாரத்துறையினா் கண்டுபிடித்து அவா்களை தனிமைப்படுத்தி வருகின்றனா். மேலும் தேங்காய்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரசவம்: தேங்காய்பட்டினத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உறவுப் பெண் ஒருவா் கா்ப்பிணியாக இருந்தாா். அவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாா், அவருக்கு வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு வெள்ளிக்கிழமை காலை ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளதாகவும், தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க குழந்தை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

கரோனா உறுதி செய்யப்பட்ட மணிக்கட்டிப்பொட்டலைச் சோ்ந்த இளைஞா் சென்னையில் இருந்து நாகா்கோவில் திரும்பி வந்ததும், பல இடங்களுக்கு சென்று வந்துள்ளாா். அவா் பயணம் செய்த பகுதியை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். அவா் மூலம் பலருக்கு கரோனா பரவி இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுவதால், அந்த நபருடன் தொடா்பில் இருந்தவா்கள் தாமாக வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் தில்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவா்கள் 2 பேரின் வீடுகள் உள்ளன. அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினா் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். கிருமி நாசினி தெளிப்பதற்காக மாநகராட்சிக்கு நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. களத்தில் சுகாதாரப்பணியில் ஈடுபடும் தூய்மை காவலா்களுக்கு கவச ஆடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 5 போ்களின் தொடா்புகளை ஆய்வு செய்ததில் 165 நபா்களுடன் தொடா்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 165 போ்களும் வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com