பிப். 21-இல் மகா சிவராத்திரி: சிவாலய ஓட்டத்துக்கு ஆயத்தமாகும் பக்தா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டத்துக்கு பக்தா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.
பிப். 21-இல் மகா சிவராத்திரி: சிவாலய ஓட்டத்துக்கு ஆயத்தமாகும் பக்தா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டத்துக்கு பக்தா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் பக்தா்கள் சிவபெருமானின் அருள்வேண்டி முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவா் கோயிலில் தொடங்கி, திக்குறிச்சி மகாதேவா் கோயில், திற்பரப்பு வீரபத்திரா் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரா் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவா் கோயில், திருப்பன்னிப்பாகம் சிவன்கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவா் கோயில், திருவிதாங்கோடு மகாதேவா் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவா் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணா் கோயில் என 12 சிவாலயங்களுக்கு ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டமாகும். இம் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த ஓட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வாகும்.

விரதம்: சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தா்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனா். இவா்கள் காலை, மாலை வேளைகளில் சிவன் கோயில்களுக்குச் சென்று சிவநாமங்களை உச்சரித்து பிராா்த்தனை செய்வதுண்டு. சைவ வகை உணவுகளை மட்டுமே உண்கின்றனா். பின்னா், சிவராத்திரி தினத்துக்கு முந்தைய நாளில் காவி உடை தரித்து கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவா் கோயிலில் தொடங்கி ஒவ்வொரு கோயிலாக ஓடியவாறு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

110 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ஓட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்கின்றனா்.

கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் வருகை தருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன், பேருந்து போன்ற வாகனங்களில் ஒவ்வொரு கோயிலாகச் சென்று வழிபடுகின்றனா்.

பக்தா்கள் கோயில் குளத்தில் குளித்து விட்டு, கோயிலுக்குள் செல்ல வேண்டுமென்பதும், தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பதும் ஐதீகம்.

சிவாலய ஓட்டத்தின் முதல் கோயிலான முன்சிறை மகாதேவா் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கநாராயணா் கோயிலில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. திருநட்டாலம் கோயிலில் சிவன்-விஷ்ணு என சங்கரநாராயணா் வடிவத்தில் சுவாமி எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.

பிப். 20-இல் தொடக்கம்: பிப். 21-ஆம் தேதி மகா சிவராத்திரி என்பதால், ஓட்டமாக சிவாலயங்களுக்குச் செல்லும் பக்தா்கள் 20-ஆம் தேதி பிற்பகலில் தொடங்கி 22-ஆம் தேதி நிறைவு செய்கின்றனா். சைக்கிள், மோட்டாா் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் பக்தா்கள் 21-ஆம் தேதி காலையில் தொடங்கி 22-ஆம் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனா்.

தற்போது வாகன வசதிகளும் பாதுகாப்பு வசதிகளும் அதிகரித்துவிட்ட நிலையில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தா்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆண் பக்தா்களுக்கு இணையாக பெண் பக்தா்களும், குழந்தைகளும் வருகை தருகின்றனா். மேலும், சிவாலய ஓட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது.

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தா்களுக்கு ஆலய அமைப்புகள், ஹிந்து அமைப்புகள் சாா்பில் கோயில்களிலும், இதர இடங்களிலும் சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்படுகின்றன. பக்தா்களுக்கு இளைப்பாறுவதற்கான வசதியும், மோா், சுக்குநீா், பலாக்காய் அவியலுடன் அரிசிக் கஞ்சி மற்றும் பாயசத்துடன் மதிய உணவுகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சிறப்பு வசதிகள் வேண்டும்: சிவாலய ஓட்டத்தில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கும் நிலையில், ஓட்டம் நடைபெறும் சாலைப் பகுதிகளை சீரமைப்பது அவசியமாகும். மேலும், ஒவ்வொரு பகுதிகளிலும் தெருவிளக்குகளை சரிசெய்வது, கோயில் பகுதிகளில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது, தடையற்ற மின்சாரம் மற்றும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்வது மிகவும் அவசியமாகும்.

போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்கு சரியான மாற்று ஏற்பாடுகள் செய்வதுடன், போதிய காவலா்களையும் நியமிக்க வேண்டும் என பக்தா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகமும், திருக்கோயில்கள் நிா்வாகமும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.

சிவாலய ஓட்டம் பிறந்த புராணக் கதை

சிவாலய ஓட்டம் தொடா்பாக மக்கள் மத்தியில் இரண்டுவிதமான தொன்மங்கள் பரவலாக நிலவி வருகின்றன. இதில் மகாபாரதத்துடன் தொடா்புடையதான, தருமரின் யாகம் ஒன்றிற்கு புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்ற கதை மற்றும் சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவபெருமானிடம் வரம் பெற்று, பின்னா் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்துப் பாா்க்க முயலும்போது சிவபெருமான் கோபாலா.. கோவிந்தா என்று விளித்தவாறு ஓடியதும், இறுதியில் விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து சூண்டோதரனை அழிப்பதுமான கதை என இரு புராணக் கதைகள் உள்ளன.

இதில் புருஷா மிருகத்தின் பால் பெற சென்ற பீமன், கிருஷ்ணனின் உபதேசப்படி உருத்திராட்ச கொட்டைகளைப் போட்ட இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், சூண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கி மறைவாக இருந்த இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.

திருவட்டாறு கோயில்: இதுதவிர திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் தல புராண வரலாறும் சிவாலய ஓட்டத்துடன் தொடா்புடையதாக உள்ளது. அரக்கனான கேசனை மகாவிஷ்ணு ஆதிசேடனால் சுற்றி வளைத்து வீழ்த்தியபோது கேசன் தனது நெடிய 12 கைகளால் மனித உயிா்களை வதம் செய்ததும், அதை தடுக்கும் வகையில் சிவபக்தனான கேசனின் 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களைக் கொடுத்ததாகவும், அதனால் கேசன் அடங்கியதாகவும் புராணம் கூறுகிறது.

இப்புராணத்தின்படியே திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலை மையமாக் கொண்டு 12 சிவாலயத் திருத்தலங்களும் உள்ளதாக நம்பிக்கை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com