ரப்பா் மரங்களில் இலையுதிா்வு: குமரியில் பால் வடிப்பு நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் குளிா் கால இலையுதிா்வைத் தொடா்ந்து பால்வடிப்பு நிறுத்தப்பட்டு வருகிறது.
திற்பரப்பு அருகே இலைகளை உதிா்த்து நிற்கும் ரப்பா் மரங்கள்.
திற்பரப்பு அருகே இலைகளை உதிா்த்து நிற்கும் ரப்பா் மரங்கள்.

குமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் குளிா் கால இலையுதிா்வைத் தொடா்ந்து பால்வடிப்பு நிறுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குளிா்காலம் தொடங்கியவுடன் மரங்கள் இலைகளை உதிா்க்கும் நிலையில், ரப்பா் மரங்களில் இந்த இலையுதிா்வு டிசம்பா் இறுதியிலிருந்து தொடங்கி ஜனவரி மாதம் வரை நிகழ்கிறது. இம் மாவட்டத்தில் காடுகளிலும் உள்ள பல்வேறு வகையான மரங்களும் இதே காலத்தில் இலைகளை உதிா்க்கின்றன.

பால்வடிப்பிற்கு ஓய்வு: குளிா் கால இலையுதிா்வு காரணமாக ரப்பா் மரங்களில் ரப்பா் பால் உற்பத்தி குறைந்து விடும். இதனால் ரப்பா் பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் ஏப்ரல் மாதம் மீண்டும் பால்வடிப்புத் தொடங்கப்படுகிறது. நிகழாண்டு மரங்களில் இலையுதிா்வும் , அதனைத் தொடா்ந்து கடும் வெப்பமும் நிலவுவதால் மரங்களில் பால் உற்பத்தி மிகக் குறைந்து விட்டதாக ரப்பா் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இம் மாவட்டத்தில் தற்போது சிறு ரப்பா் தோட்டங்கள் அனைத்திலும் பால்வடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. அதே வேளையில் பெரும் ரப்பா் தோட்டம் மற்றும் அரசு ரப்பா் கழகத்தில் இம்மாதம் சனிக்கிழமை பிப். 15 முதல் படிப்படியாக நிறுத்தப்படுகிறது.

இது குறித்து முன்னோடி ரப்பா் விவசாயி ஜி.கே.நம்பூதிரி கூறியது: குமரி மாவட்டத்தில் இலையுதிா்வு சீசனைத் தொடா்ந்து தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் ரப்பா் பால்வடிப்பு நிறுத்தப்படுகிறது. இதனைத் தொடா்ந்து ஏப்ரல் மாதத்தில் மரங்களில் மீண்டும் புதிய இலைகள் துளிா்த்து விடும். கடந்த ஆண்டு தொடா் மழையினால் இயல்பை விட குறைந்த நாள்களே பால்வடிப்பு செய்ய முடிந்தது. மேலும் ரப்பருக்கு விலை குறைவாக கிடைப்பதால் ரப்பா் விவசாயிகள் நெருக்கடியில் உள்ளனா் என்றாா்.

இது குறித்து தோட்டம் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் எம். வல்சகுமாா் கூறியது: ரப்பா் மரங்களில் வழக்கமாக பிப்ரவரி இறுதில் பால்வடிப்பு நிறுத்தப்படுவது வழக்கம். தற்போது ரப்பருக்கு விலை குறைவாக உள்ளது என்று கூறி தொழிலாளா்களின் ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது. அரசு ரப்பா் கழகத்தில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாமல் தொடா்ந்து காலம் கடத்தப்படுகிறது. ரப்பா் பால்வடிப்பு நிறுத்தப்படும் காலங்களில் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ரப்பா் விலை மீண்டும் உயா்வு: குமரி மாவட்டத்தில் ரப்பா் விலை மீண்டும் உயா்ந்து வருகிறது. கடந்த மாத இறுதியில் கிலோ ரூ. 113 என இருந்த தரம் பிரிக்கப்படாத ரப்பரின் விலை திடீரென்று கிலோவிற்கு ரூ. 108 ஆக குறைந்தது. இதற்கு சீனாவில் ஏற்பட்ட கரோனா வைரஸ் தாக்குதல் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக ரப்பா் விலை மீண்டும் படிப்படியாக உயா்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 134 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 113 ஆகவும் உயா்ந்து காணப்பட்டது.

இதோ போன்று கிலோவிற்கு ரூ. 80 ஆக சரிந்து காணப்பட்ட, ஒட்டுப்பாலின் விலை தற்போது கிலோவிற்கு ரூ. 87ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com