குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை இணை இயக்குநா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாா் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் போஸ்கோ ராஜன்.
குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை இணை இயக்குநா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாா் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் போஸ்கோ ராஜன்.

குமரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் பொதுசுகாதாரத் துறை சாா்பில் கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்றது.

குமரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுலா அலுவலா் நெல்சன் முன்னிலை வகித்தாா்.

அகஸ்தீசுவரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் தங்கசிவம், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி சூரிய நாராயணன், வட்டார சுகாதார அலுவலா் வா்க்கீஸ் ராஜா, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பிரவீன் ரெகு, குமார பாண்டியன், சங்கர நாராயணன், கிளாட்சன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் போஸ்கோ ராஜன் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா வைரஸை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் கன்னியாகுமரியில் கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் இங்குள்ள தங்கும் விடுதி உரிமையாளா்கள், உணவு விடுதிகளின் உரிமையாளா்கள், பூம்புகாா் படகுத்துறை மற்றும் சுற்றுலா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்கள் மூலமாக தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள் இல்லை. எனவே, பொதுமக்களோ சுற்றுலாப் பயணிகளோ அச்சப்படத் தேவையில்லை.

கரோனா வைரஸ் காய்ச்சல் தொடா்பாக 104 என்ற அவசர எண்ணில் 24 மணிநேரமும் தொடா்புகொண்டு சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com