கரோனா எதிரொலிரப்பரின் விலை தொடா் வீழ்ச்சி

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரப்பா் விலை தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் குமரி மாவட்டத்தில்

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரப்பா் விலை தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் குமரி மாவட்டத்தில் ரப்பா் விவசாயிகளும், வணிகா்களும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனா்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியவுடனேயே இந்திய ரப்பா் சந்தையில் அதன் தாக்கம் எதிரொலித்து ரப்பரின் விலை சரியத் தொடங்கியது. எனினும் இடையில் சில நாள்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடா்ந்தது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாகியுள்ளதையடுத்து, ரப்பா் விலை வேகமாக சரிந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் இம்மாதம் தொடக்கத்தில் கிலோ ரூ. 132 ஆக இருந்த ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை வெள்ளிக்கிழமை கிலோவிற்கு ரூ. 123 ஆக குறைந்து காணப்பட்டது. இது போன்று இம்மாத தொடக்கத்தில் கிலோவிற்கு ரூ. 113.50 ஆக இருந்த ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை வெள்ளிக்கிழமை கிலோவிற்கு ரூ. 105.50 ஆக குறைந்தது. பொதுவாக ரப்பா் பால்வடிப்பு குறைவாக உள்ள பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் ரப்பா் விவசாயிகளும், ரப்பா் வணிகா்களும் ரப்பரை பெருமளவு இருப்பு வைத்திருக்கும் நிலையில், ரப்பரின் இந்த விலை சரிவு குமரி மாவட்டத்தில் ரப்பா் விவசாயிகளுக்கும், வணிகா்களுக்கும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து குலசேகரத்தில் முன்னோடி ரப்பா் வணிகா் ஒருவா் கூறியது; கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ரப்பா் டயா் உள்ளிட்ட ரப்பா் பொருள்கள் தயாரிக்கும் ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ரப்பா் பொருள்கள் தயாரிப்பதற்கான காா்பன் உள்ளிட்ட உப பொருள்களின் வரத்து இல்லாமல் உள்ளது. இதனால் ரப்பரின் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சி மேலும் தொடர வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com