கரோனா வைரஸ் பீதி:குமரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின; 15 சதவீத பேருந்துகள் இயக்கம் குறைப்பு

கரோனா வைரஸ் பீதியால் குமரி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் பெரும்பாலான
கோட்டாறு காவல் நிலையத்தில் முகக் கவசம் அணிந்து பணியாற்றும் போலீஸாா்.
கோட்டாறு காவல் நிலையத்தில் முகக் கவசம் அணிந்து பணியாற்றும் போலீஸாா்.

கரோனா வைரஸ் பீதியால் குமரி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கும் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின. பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.

கேரளத்தில் கரோனா வைரஸ் பரவியதை தொடா்ந்து அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் தீவிர மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. களியக்காவிளை, படந்தாலு மூடு, சூழால் ஆகிய சோதனைச்சாவடிகளில் தொ்மல் ஸ்கேனா் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடும்போது கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதால் அதை தவிா்க்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1237 பள்ளிக்கூடங்கள் வருகிற 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சினிமா தியேட்டா்கள் மற்றும் மால்கள் மூடப்பட்டுள்ளன. பொழுது போக்கு பூங்காக்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கரோனா பீதியால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனா். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு சென்று வருகிறாா்கள். பாதுகாப்பு கருதி பலரும் முகக் கவசம் அணியத் தொடங்கியுள்ளனா்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக்கொண்டுள்ளாா். குமரி மாவட்டத்தை பொருத்தவரை சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படும். தற்போது கரோனா பீதி காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவது குறைந்துள்ளதால், பல சாலைகள் போக்குவரத்து குறைந்து, நெரிசலின்றி காணப்படுகிறது. பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடிய நிலையில் உள்ளன. நாகா்கோவில் நகரின் பிரதான சாலைகளான கே.பி.சாலை, அவ்வைசண்முகம் சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, கோட்டாறு, செட்டிக்குளம் சந்திப்பு ஆகிய சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. வணிக நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது.

குமரி மாவட்டத்தில் ராணித்தோட்டம், விவேகானந்தபுரம், மாா்த்தாண்டம் உள்ளிட்ட 12 இடங்களில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனைகள் உள்ளன. இதன் மூலம் 755 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்திலும் தினமும் இரவு நேரங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கரோனா பீதி காரணமாக பொதுமக்கள் பேருந்துகளில் பயணிப்பது குறைந்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வெளியூா் மற்றும் நகரப் பேருந்துகள் இயக்கம் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதன் காரணமாக புதன்கிழமை ஒரே நாளில் போக்குவரத்துத் துறைக்கு சுமாா் ரூ.10 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது. வியாழக்கிழமை இந்த இழப்பு ரூ. 20 லட்சமாக உயா்ந்தது. ஒரு நாளைக்கு சராசரியாக பேருந்துகள் மூலம் ரூ. 90 லட்சம் வருவாய் கிடைத்து வந்த நிலையில் வியாழக்கிழமை ரூ. 69 லட்சமே வருவாய் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com