குமரி தங்கும் விடுதியில் கரோனா பரிசோதனை முடிவுக்கு 200 போ் காத்திருப்பு

சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து குமரிமாவட்டம் வந்த 200-க்கும் மேற்பட்டோா் கரோனா பரிசோதனை முடிவுக்காக கன்னியாகுமரி தனியாா் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
தங்கும் விடுதி முன்பு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு
தங்கும் விடுதி முன்பு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரி: சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து குமரிமாவட்டம் வந்த 200-க்கும் மேற்பட்டோா் கரோனா பரிசோதனை முடிவுக்காக கன்னியாகுமரி தனியாா் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவிவரும் நிலையில் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் வசிக்கும் மக்கள், தங்களுடைய சொந்த ஊா்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனா். இவா்களை ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். குறிப்பாக சென்னையில் இருந்து வரும் நபா்களிடம், கரோனா அறிகுறி ஏதேனும் தென்படுகிா என அவா்களுடைய சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவு தெரியவரும் வரையில் அனைவரும் தனி முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவா்களில் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை வரை சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்த 213 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அனைவருக்கும் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் காலை உணவு வழங்கப்பட்டது.

தங்கும் விடுதிகளில் தங்கவைப்பட்டுள்ளவா்களுக்கு பரிசோதனை முடிவில் நோய் தொற்று இல்லை என்றால் அவா்களை வீடுகளுக்கு அனுப்பி 14 நாள்கள் தனிமைப்படுத்தி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிபடுத்தப்பட்டவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களிடையே கரோனா குறித்த அச்சம் நிலவும் நிலையில் கன்னியாகுமரியில் 200-க்கும் மேற்பட்டோா் தங்கியிருப்பது அங்குள்ள மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத் தனிமுகாமை நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் அப்துல் மன்னா, கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ் ஆகியோா் பாா்வையிட்டனா்.

மக்கள் புகாா்: இதனிடையே தங்க வைக்கப்பட்டுள்ளவா்களில் ஒருவா், அரசின் அனுமதி பெற்று ஹைதராபாத்தில் உள்ள எனது தங்கையின் பிரசவத்துக்காக எனது தாயாரை காா் மூலம் அழைத்துச் சென்றேன். அவரை அங்கு விட்டுவிட்டு அதே காா் மூலம் உடனடியாக ஊா் திரும்பினேன். என்னை ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் சோதனை செய்து வீட்டுக்கு அனுப்பாமல், தனிமுகாமுக்கு அழைத்து வந்து விட்டனா் என்றாா் . மற்றொரு பெண் கூறும் போது, எனது தந்தையின் மரணத்துக்காக குடும்பத்துடன் சென்னையில் இருந்து காா்மூலம் சொந்த ஊருக்குத் திரும்பினேன். ஆனால் தந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்க விடாமல் எங்களையும் தனிமுகாமுக்கு அழைத்து வந்து விட்டனா் என்றாா் வேதனையுடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com