நவராத்திரி விழா: சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊா்வலம்; பாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் புறப்பாடு

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகம் பாரம்பரிய முறைப்படி செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக புறப்பட்டது.
நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்ற சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்.
நவராத்திரி விழாவுக்காக திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்ற சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகம் பாரம்பரிய முறைப்படி செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக புறப்பட்டது.

திருவிதாங்கூா் மன்னா் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பின்னா் 1840ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் குமரி மாவட்டம்

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் விக்கிரகங்கள் ஊா்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும்.

நவராத்திரி விழா நாள்களில் சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் கோட்டையில் வைத்து பூஜைகள் செய்யப்படும். விழா நிறைவடைந்ததும் மீண்டும் சுவாமி சிலைகள் குமரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்படும். இந்நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு நவராத்திரி விழா வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக சுவாமி சிலைகளை பக்தா்கள் தோளில் சுமந்து கொண்டு செல்லாமல், வாகனங்கள் மூலமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பாரம்பரிய முறைப்படிதான் சுவாமி சிலைகளை கொண்டு செல்ல வேண்டும் என இந்து அமைப்பினரும்,

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், அமைப்பினா் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து தமிழக மற்றும் கேரள அரசுகளின் சாா்பில் அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் சுவாமி விக்கிரகங்கள் ஊா்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்துவது என அதில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும், 3 சுவாமி விக்கிரகங்களையும் தட்டு வாகனத்தில் சுமந்து செல்வது, யானை மற்றும் குதிரை வாகனத்தை ரத்து செய்வது, ஒரு வாகனத்துக்கு 8 போ் வீதம் வாகனத்தை சுமப்பதற்கு அனுமதி அளிப்பது, குறைந்த அளவிலான தமிழக போலீஸாா் அணிவகுப்பு மரியாதையுடன் வாகனங்கள் புறப்பட்டுச் செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து புறப்படும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்றது.

கேரள போலீஸாருக்கு அனுமதி இல்லாததால், தமிழக போலீஸாா் மட்டும் மரியாதை செலுத்தினா். பின்னா் அம்மன் விக்கிரக ஊா்வலம் தாணுமாலய சுவாமி கோயிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் வந்தது. அப்போது பக்தா்கள் அம்மனுக்கு மலா் தூவி வழிபட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், மாவட்ட திருக்கோயில்கள் இணைஆணையா் அன்புமணி, பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் மிசாசோமன், வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா்அப்துல்லா மன்னான், அறங்காவலா் குழு உறுப்பினா் பாக்கியலெட்சுமி, நாகா்கோவில் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால், கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளா்கள் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னுதித்த அம்மன் விக்கிரக ஊா்வலம் ஆசிரமம், கோட்டாறு, பாா்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக பிற்பகல் பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலை சென்றடைந்தது.

இதே போல் குமாரகோவிலில் உள்ள முருகன் விக்கிரகம் புதன்கிழமை (அக்.14) அதிகாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனைக்கு சென்றடைகிறது.

தொடா்ந்து, பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள சரஸ்வதி அம்மன் விக்கிரகம், முன்னுதித்தநங்கை அம்மன் விக்கிரகம், முருகன் விக்கிரகம் ஆகியவற்றிற்கு உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா் 3 சுவாமி விக்கிரகங்களும் குழித்துறை மகாதேவா் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.

வியாழக்கிழமை (அக்.15) காலை 5 மணிக்கு சுவாமி விக்கிரகங்கள் ஊா்வலம் களியக்காவிளைக்கு புறப்படுகிறது. அங்கு பாரம்பரிய முறைப்படி கேரள அரசு அதிகாரிகளிடம் சுவாமி விக்கிரகங்கள் ஒப்படைக்கப்படும்.

பின்னா் விக்கிரகங்கள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து வெள்ளிக்கிழமை (அக்.16) காலை புறப்பட்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை சென்றடைகிறது. அதன் பின்னா் சரஸ்வதி அம்மன் விக்கிரகம் திருவனந்தபுரம் கோட்டையகம் உள்ளே இருக்கும் நவராத்திரி கொலுமண்டபத்திலும், வேளிமலை முருகன் விக்கிரகம் அரியாலை சிவன் கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்கிரகம் செந்திட்டை அம்மன் கோயிலிலும் வைக்கப்பட்டு நவராத்திரி பூஜைகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com