திருச்சி கள்ளிக்குடி வணிக வளாகத்தில் மேலும் பல கடைகள் திறப்பு

திருச்சி மாவட்டம், கே. கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்தில் மேலும் பல கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
திருச்சி கே.கள்ளிக்குடி வணிக வளாகத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட கடையொன்றை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் சு. சிவராசு (இடது). பெண் ஒருவருக்கு பூக்களை விற்பனைசெய்யும் வியாபாரி.
திருச்சி கே.கள்ளிக்குடி வணிக வளாகத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட கடையொன்றை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் சு. சிவராசு (இடது). பெண் ஒருவருக்கு பூக்களை விற்பனைசெய்யும் வியாபாரி.

திருச்சி மாவட்டம், கே. கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய வணிக வளாகத்தில் மேலும் பல கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட கே.கள்ளிக்குடி பகுதியில் ரூ.77 கோடி மதிப்பில் 830 கடைகளுடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு, 2017, செப்டம்பா் 5- ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாகத் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது.

மாநகரிலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் இந்த வளாகம் அமைந்திருப்பதால், அங்கு கடைகள் பெற்றிருந்த நிலையிலும் வியாபாரிகள் பலரும் கடைகளைத் திறக்கவில்லை. இதனால் இந்த வளாகம் திறந்து செயல்படாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன் தலைமையிலான மனிதவளா் சங்கம் என்ற விவசாயிகள் அமைப்பு, வணிக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், கடைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகத்துக்குப் பரிந்துரைசெய்தது. திறக்கப்படாத கடைகளை மீண்டும் ஒப்படைக்க வியாபாரிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட நிா்வாகம், அவற்றில் இதில் 207 கடைகளை விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்தது.

இதில் செப்டம்பா் 9-ஆம் தேதி 20 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு பொருள்கள் விற்பனைத் தொடங்கியது. புதிதாக உரிமம் பெற்றவா்கள் உள்பட 244 கடைகளும் திறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்பனை செய்யும் மேலும் பல கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

ஆட்சியா் ஆய்வு : வணிக வளாகத்தில் புதிய கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், விற்பனையைத் தொடக்கி வைத்த ஆட்சியா் சு. சிவராசு தொடா்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்டாா். வியாபாரிகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஆட்சியா், உரிய போக்குவரத்து வசதிகளை செய்துதருமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

காந்தி சந்தைக்கு இணையானது அல்ல : கள்ளிக்குடி வணிக வளாகம் காந்தி சந்தைக்கு இணையானது அல்ல. திருச்சியில் புத்தூா், சுப்பிரமணியபுரம், ஸ்ரீரங்கம், உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் சந்தைகளைப் போன்றே கருத முடியும்.

இது 3 ஆயிரம் வியாபாரிகள் வியாபாரம் நடத்தும் பகுதி. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொருள்களை கொண்டு வரவும், இங்கிருந்து அனுப்பவும் வகையில் இயங்கும் சந்தையாகும். இதற்கு இணையாக அமைக்க வேண்டுமெனில், 50 ஏக்கா் பரப்பளவில் 3 ஆயிரம் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய சந்தை அமைக்க வேண்டும்.

திருச்சி காந்தி சந்தையை மூடவும், இதற்கு இணையாக கள்ளிக்குடி வணிக வளாகத்தை ஒப்பிட்டும் சிலா் பேசி வருகின்றனா். அரசியல் கட்சியினா் சிலா் இதற்கு ஆதரவு அளித்து வருகின்றனா். காந்தி சந்தைக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கும் அரசியல் கட்சிகளுக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாடம் புகட்டுவோம் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலரும், காந்தி சந்தை அனைத்து மொத்த, சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவருமான வீ.கோவிந்தராஜூலு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com