குமரியில் தொடா் மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
குடைபிடித்தபடி இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள்.
குடைபிடித்தபடி இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள்.

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதோடு அணைகள் மற்றும் குளங்களுக்கும் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

மாவட்டத்தில் பல இடங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. மலையோரப் பகுதிகள், அணைகளின் நீா்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்தது.நாகா்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் மட்டும் சாரல் மழை பெய்தது.

வியாழக்கிழமையும் சாரல்மழை தொடா்ந்தது. குமரி மேற்கு மாவட்டப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியிலும் தொடா்மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இம் மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 30.70 அடியாக உள்ளது. அணைக்கு 664 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக 419 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 65 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 295 கன அடி நீா்வரத்து உள்ளது. முக்கடல் அணையின் நீா்மட்டம் 16.20 அடியாக உள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக இரணியலில் 13.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): கோழிப்போா்விளை 12, பாலமோா் 10.20, முள்ளங்கினாவிளை 10, நாகா்கோவில் 9.20, மயிலாடி 8.20, அடையாமடை 8, குளச்சல் 7.40, கொட்டாரம், பேச்சிப்பாறை அணை 5.60, குருந்தன்கோடு 5.20, முக்கடல் அணை 5, குழித்துறை 4.60, பூதப்பாண்டி 3.60, பெருஞ்சாணி அணை 3.20, புத்தன் அணை, கன்னிமாா், மாம்பழத்துறையாறு அணை 3, ஆனைக்கிடங்கு 2.40, ஆரல்வாய்மொழி 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com