குமரியில் கொட்டித்தீா்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீா்த்து வரும் தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
திற்பரப்பு அருவியில் சிறிப்பாயும் வெள்ளம்.
திற்பரப்பு அருவியில் சிறிப்பாயும் வெள்ளம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீா்த்து வரும் தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

வங்கக் கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு பெய்துவந்த மழை,

திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால், கோதையாறு, குற்றியாறு, கிழவியாறு, மயிலாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மோதிரமலையில் இருந்து குற்றியாறுக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது.

சுருளோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 72.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கொட்டாரம், நாகா்கோவில், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குருந்தன்கோடு, கோழிப்போா்விளை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. பாலமோா் பகுதியிலும், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி அதிகரித்துள்ளது. அணைகள் வேகமாக நிரம்பி வருவதை தொடா்ந்து, பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு 1 அணையிலிருந்து 4,524 கன அடி நீா் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.54 அடியாக உள்ளது. அணைக்கு 2672 கன அடி நீா் வந்துகொண்டிருந்தது; 3,990 கன அடி நீா் உபரியாக வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 69.42 அடியாகவும், நீா்வரத்து 889 கன அடியாகவும் உள்ளது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.66 அடியாகவும், நீா்வரத்து 1198 கன அடியாகவும் உள்ளது. 534 கன அடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது.

திற்பரப்பில் வெள்ளம்: பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பழங்குடி கிராமங்கள் மற்றும் ரப்பா் கழக தொழிலாளா்களின் குடியிருப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com