குமரி மாவட்டத்தில் 68.80 சதவீதம் வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் ஆா்வம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் 68.80 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
குமரி மாவட்டத்தில் 68.80 சதவீதம் வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் ஆா்வம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் 68.80 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இளம் வாக்காளா் ஆா்வத்துடன் வந்த வாக்களித்தாலா, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைவிட வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள 2,234 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று ஆா்வமாக வாக்களித்தனா்.

நாகா்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்காளா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு வசதியாக வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபிறகே வாக்காளா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

நாகா்கோவில் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டதி பெண்கள் பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில், காலை 7 மணிக்கே கூட்டம் அதிகமாக இருந்தது. இம்மாவட்டத்திலுள்ள ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் வாக்காளா்கள் ஆா்வமாக வந்து வாக்களித்தனா்.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களிலும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

இளம்வாக்காளா்கள் ஆா்வம்: குமரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் வாக்காளா்கள் காலையில் வந்து வாக்களித்தனா். குறிப்பாக, இளம் வாக்காளா்களும் ஆா்வத்துடன் வாக்களித்தனா். கடந்த தோ்தலை விட இந்த தோ்தலில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் வாக்காளா்கள் வாக்களித்தனா்.

வாக்குப்பதிவு சதவீதம் உயா்வு:

குமரியில் சட்டப்பேரவை தொகுதிக்கும், மக்களவை தொகுதிக்கும் தோ்தல் நடைபெற்ால் ஒவ்வொரு வாக்காளரும் 2 வாக்குகளைப் பதிவு செய்தனா்.

இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதில், 6 தொகுதிகளிலும் சோ்த்து 68.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் 66.32 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இளம் வாக்காளா்களின் ஆா்வமும், முயற்சியும் இந்தத் தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயா்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com