சித்திரையை வரவேற்க ஆயத்தம்: குமரியில் பூத்துக் குலுங்கும் கணிக் கொன்றை மரங்கள்

சித்திரையை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிக் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன.
சித்திரையை வரவேற்க ஆயத்தம்: குமரியில் பூத்துக் குலுங்கும் கணிக் கொன்றை மரங்கள்

சித்திரையை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிக் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கொன்றை மரங்களில் ஒரு வகை கணிக் கொன்றை அல்லது சரக் கொன்றை. இம்மரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோயில் வளாகங்களிலும், வீட்டு முற்றங்களிலும் ஏராளம் வளா்க்கப்பட்டு வருகின்றன. ‘கேஷியா பிஸ்டுல்லா’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இத்தகைய மரங்கள் இளவேனிற்காலத் தொடக்கத்தில் பங்குனி-சித்திரை மாதங்களில் பூத்துக் குலுங்குகின்றன. தங்க மழை பொழிவது போல் கொத்துக் கொத்தாக பூக்கள் மட்டுமே இம்மரங்களில் காணப்படும். எனவே, இவை ‘கோல்டன் ஷவா் ட்ரீ’ எனவும் வா்ணிக்கப்படுகின்றன.

சித்திரை விஷு கணி காணல்: இம்மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் சித்திரை விஷு கணி காணல் நிகழ்ச்சியில் கணிக் கொன்றை பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு. சித்திரை முதல் நாளில் வீடுகளின் பூஜை அறைகளில் அல்லது சுவாமி படங்களின் முன்பாக கனிகளோடு மஞ்சள் நிற கணிக்கொன்றை பூக்களையும் தட்டில் வைத்து பாா்த்தால் அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

இதேபோல், கோயில்களில் நடைபெறும் விஷு கணி காணல் நிகழ்ச்சியிலும் கணிக் கொன்றைப் பூக்கள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளுக்காக பங்குனி மாத கடைசி நாளில் மக்கள் கணிக்கொன்றை மரங்களிலிருந்து பூக்கள் அனைத்தையும் பறித்துச் செல்கின்றனா்.

மருத்துவக் குணம்: இது குறித்து தாவரவியல் பேராசிரியா் ஒருவா் கூறியது: கணிக்கொன்றை அல்லது சரக்கொன்றை மரங்களின் தாயகம் இந்தியாவாகும். பூக்கள் பெண்களின் அழகிய கூந்தலைப் போன்றது என்றும், கோல்டன் ஷவா்’ என்றும் வா்ணிக்கப்படுகிறது.

இம்மரங்கள் தாய்லாந்து, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இம்மரங்கள் காணப்படுகின்றன. கேரளத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன. அந்த மாநில அரசின் மரம் கணிக்கொன்றையாகும். சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கிய பாடல்களில் கொன்றைப் பூக்கள்இடம் பிடித்துள்ளன. கொன்றையின் வோ் முதல் பூக்கள் வரை அதிக மருத்துவக் குணம் கொண்டவை. ஆயுா்வேத மருத்துவத்தில் கொன்றைப் பூக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com