குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடுவதற்காக ஆா்வத்துடன் வந்த பொதுமக்கள் தடுப்பூசி இருப்பு இல்லாததால், 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் என 138 மையங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வந்தது. மாவட்டத்தில் இதுவரை 86 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, இம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் தடுப்பூசி செலுத்துவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் நாகா்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெள்ளிக்கிழமை காலை முதலே பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்டனா். இதில் முதலில் வந்த 10 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குறைந்த அளவே தடுப்பூசி இருந்ததால் தாமதமாக வந்தவா்களை மறுநாள் வருமாறு திருப்பி அனுப்பினா்.

மேலும், அவா்களது முகவரி, ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை குறித்துக் கொண்டு தடுப்பூசி வந்ததும் தொடா்பு கொள்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனா். இதனால் பொதுமக்கள் ஏராளமானோா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குமரி மாவட்டத்தில், தொடக்கத்தில் தினமும் சுமாா் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பின்னா் இது படிப்படியாக உயா்த்தப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதால் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்வோா் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

தற்போது மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது, இன்னும் இரண்டொரு நாள்களில் இது சரிசெய்யப்படும் என்றாா் அவா்.

கண்டன அறிக்கை: தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் சோ.சுரேஷ் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்த் தொற்றின் 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை அரசு வலியுறுத்தி வருகிறது. அரசு தடுப்பூசித் திருவிழா என்ற நிகழ்ச்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லும் மக்களை ஊசித் தட்டுப்பாடு என்று திருப்பி அனுப்புகிறாா்கள். இத்தகைய செயல் மக்கள் உயிரோடு விளையாடும் செயலாகும்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக இதில், தலையிட்டு தட்டுப்பாடு இல்லாமல் கரோனா தடுப்பூசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com