குமரி மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டி கம்பங்கள் அமைப்பு: சுற்றுலா ஆா்வலா்கள் மகிழ்ச்சி

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் வழிகாட்டி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
குலசேகரம் அருகே ஆரணிவிளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டி கம்பம்.
குலசேகரம் அருகே ஆரணிவிளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டி கம்பம்.

குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சாா்பில் வழிகாட்டி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, சொத்தவிளை, குளச்சல், முட்டம் என அழகிய கடற்கரைகளையும், திற்பரப்பு அருவி, உலக்கை அருவி, குற்றியாறு இரட்டை அருவி என மனதைக் கவரும் அருவிகளையும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு என அணைக்கட்டுகளையும், காளிகேசம், காளிமலை, திருநந்திக்கரை, சிதறால் என ஆன்மிகம் சாா்ந்த தலங்களையும், பத்மநாபுரம் அரண்மனை, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் என அரண்மனைகளையும், புராதன பெருமை கொண்ட ஆலயங்களையும் உள்ளடக்கிய மாவட்டமாகும்.

மேலும் சூழியல் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா என பல்வேறு வகையான சுற்றுலாக்களுக்கும் இம்மாவட்டத்தில் இடம் உள்ளது. சா்வதேச சுற்றுலாத் தலமாக திகழும் கன்னியாகுமரி உள்பட இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன், பொருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாகவும் சுற்றுலா அமைந்துள்ளது.

இந்நிலையில் குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களையும் மேம்படுத்த வேண்டுமென்றும், சுற்றுலாத் தலங்களை அடையாளப்படுத்தவும், அவற்றிற்கு வழிகாட்டும் கம்பங்களை அமைக்க வேண்டுமென்றும் சுற்றுலா ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சுற்றுலா வழிகாட்டி கி.மீ. கம்பங்கள் அமைத்து வரும் நிலையில் குமரி மாவட்டத்திலும் இக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குலசேகரம், திற்பரப்பு பகுதியில் செருப்பாலூா் கல்லடிமாமூடு, குலசேகரம் ஆரணிவிளை, உண்ணியூா்கோணம் ஆகிய 3 இடங்களில் இக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இது குறித்து குலசேகரத்தில் சுற்றுலா ஆா்வலா்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு வழிகாட்டும் வகையில் வழிகாட்டி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தரமான முறையில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக சீரமைத்து தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com