கரோனா: 2-ஆவது ஆண்டாக கோடை சீசனை இழந்த கன்னியாகுமரி

கரோனா 2-ஆவது அலை அதிகரிக்க தொடங்கியதால், கன்னியாகுமரி நிகழாண்டும் கோடை சீசனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனா்.
சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை பகுதி.
சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை பகுதி.

நாகா்கோவில்: கரோனா 2-ஆவது அலை அதிகரிக்க தொடங்கியதால், கன்னியாகுமரி நிகழாண்டும் கோடை சீசனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனா்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பாா்த்து ரசிப்பா். பின்னா் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடலில் குளித்து மகிழ்வா்.

கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வா். பின்னா் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை படகு மூலம் சென்று பாா்த்து ரசிப்பா்.

காந்தி நினைவு மண்டபம், காமராஜா் மணிமண்டபம், காட்சி கோபுரம், அரசு அருங்காட்சியகம், நீா் விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா, சுனாமி நினைவுப் பூங்கா, தமிழன்னை பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், புனித அலங்கார உபகார மாதா ஆலயம், வட்டக்கோட்டை, சொத்தவிளை கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை என கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் ரசித்து மகிழ்வா்.

மாலையில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சி பாா்த்து ரசிப்பா். காலை, மாலை வேளையில் கடல் அழகை கண்டு ரசிப்பதுண்டு. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும், சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும்.

கன்னியாகுமரிக்கு சபரிமலை ஐயப்ப பக்தா்கள் வருகை தரும் நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்களிலும், கோடை விடுமுறை காலமும் சீசன் காலமாகும். கோடை சீசன் ஏப்ரல், மே மாதங்களில் களைக் கட்டும். ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒரு கோடி போ் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று பரவலால் பிறப்பிக்கப்பட்ட முழு பொது முடக்கத்தால் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையால் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்ட கடற்கரை, அனைத்து சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடின. தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பகவதி அம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.

கரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததை தொடா்ந்து பொது முடக்கத்தில் அளிக்கப்பட்ட தளா்வுகளால் சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கன்னியாகுமரிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கினா்.

இதற்கிடையே, ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து கரோனா 2-ஆவது அலை பரவத் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

இதையடுத்து கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது. விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும் சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால், சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்து வரும் தங்கும் விடுதிகள், உணவகங்களுக்கு, கடை வியாபாரிகளுக்கு, புகைப்படக் கலைஞா்களுக்கு, நடமாடும் வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் காலமாகும்.

இந்த சீசனில் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவா். தற்போது கரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டும் கோடை சீசனை இழந்து கன்னியாகுமரி வெறிச்சோடியுள்ளது. நிகழாண்டும் தடை இருப்பதால் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து கன்னியாகுமரி கைவினைப் பொருள்கள் வியாபாரி முருகேசன் கூறியது:

எங்களை போன்ற சிறிய வியாபாரிகளுக்கு சுற்றுலாப் பயணிகள்தான் தெய்வம். கடந்த ஆண்டு கரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. நிகழாண்டு தொழில் செய்யலாம் என காத்திருந்தோம்.

ஆனால் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் ஆயிரக்கணக்கான சிறிய வியாபாரிகளின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது எனற்ாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com