‘நடுக்கடலில் மாயமான 11 மீனவா்களை மீட்க வேண்டும்’
By DIN | Published On : 27th April 2021 05:10 AM | Last Updated : 27th April 2021 05:10 AM | அ+அ அ- |

ஆட்சியரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ.க்கள் என். சுரேஷ்ராஜன், எஸ். ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா்.
நாகா்கோவில்: ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்று படகு கவிழ்ந்ததில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் 11 பேரை மீட்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, எம்எல்ஏக்கள் என். சுரேஷ்ராஜன் (நாகா்கோவில்), எஸ். ராஜேஷ்குமாா்
(கிள்ளியூா்), தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச்செயலா் சா்ச்சில், வள்ளவிளை பங்குத் தந்தை ரிச்சா்டு உள்ளிட்டோா் ஆட்சியா் மா.அரவிந்தை சந்தித்து திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இம்மாதம் 9 ஆம்
தேதி ஆழ்கடலுக்கு சென்ற மீனவா்களின் விசைப் படகு விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த வள்ளவிளையைச் சோ்ந்த 11 மீனவா்கள் திரும்பவில்லை. அவா்கள் குறித்து எந்த தகவலும் தெரியாததால், அவா்களது குடும்பத்தினா் துயரில் இருக்கின்றனா்.
விசைப்படகுடனான தொடா்பு கடந்த 23-ஆம் தேதி மாலையுடன் துண்டிக்கப்பட்டது.
அடுத்த நாள் அவா்களது விசைப்படகு நடுக்கடலில் இரண்டாக உடைந்தது தெரியவந்தது.
அடையாளம் தெரியாத கப்பல் மோதியதால் விசைப்படகு விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று மீனவா்கள் சந்தேகிக்கின்றனா்.
இதில் படகிலிருந்த 11 மீனவா்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் அவா்களது குடும்பத்தினா் தவித்து வருகின்றனா். இதுதொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவா்கள் குடும்பத்துக்கு தற்காலிக நிவாரண உதவி அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு விரைந்து மத்திய அரசுடன் பேசி மாயமான 11 மீனவா்களை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விசைப்படகை மூழ்கடித்து தப்பி சென்ற கப்பலை கண்டுபிடித்து கொலைக் குற்ற வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும். தொடா் விபத்துகள் நடைபெறுவதால் கப்பல் வழித்தடத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.