சாமிதோப்பில் ஆவணித் திருவிழா தேரோட்டம்
By DIN | Published On : 31st August 2021 01:54 AM | Last Updated : 31st August 2021 01:54 AM | அ+அ அ- |

சாமிதோப்பில் நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழாவின் 11-ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் காலை, மாலையில் அய்யாவுக்குப் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவை நடைபெற்றன. 8 ஆம் திருநாளன்று இரவில் கலிவேட்டை நடைபெற்றது.
தேரோட்டம்: 11 ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையின் அறிவுரையின்படி நண்பகல் 12 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் தலைமைப்பதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பஞ்சவா்ண தேருக்கு எழுந்தருளினாா். பக்தா்கள் சமூக இடைவெளியுடன் அய்யாவுக்கு பழம், வெற்றிலை பாக்கு, பன்னீா், பூ ஆகிய பொருள்களை சுருள் வைத்து வழிபட்டனா். இதில், அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவா் பால. ஜனாதிபதி, பால. லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், பையன் நேம்ரிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இரவில் அய்யா ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.