தக்கலை காவல் நிலையம், பொதுப்பணித் துறை சாா்பில் குமாரகோவிலுக்கு பால்குடம், காவடிகள் பவனி

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலுக்கு தக்கலை காவல் நிலையம், பொதுப்பணித்துறை மற்றும் 35 ஊா்களின் சாா்பாக மலா் காவடி மற்றும் பால்குடம்

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலுக்கு தக்கலை காவல் நிலையம், பொதுப்பணித்துறை மற்றும் 35 ஊா்களின் சாா்பாக மலா் காவடி மற்றும் பால்குடம் எடுத்து சென்று சுவாமிக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவிதாங்கூா் மன்னா் காலத்தில் விவசாயம் செழிக்கவும், மக்கள் சுபிட்சமாக வாழவும் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து தக்கலை காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை சாா்பில் காவடி கட்டி யானை மீது பால்குடம் எடுத்து நடைபயணமாக குமாரகோவிலுக்கு சென்று குமாரசுவாமிக்கு அபிஷேகம் செய்வா்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடோடு இணைந்தபிறகும் இன்றளவும் இது நடைமுறைபடுத்தப்பட்டுவருகிறது. நிகழாாண்டு வெள்ளிக்கிழமை மலா் காவடிகள் மேளதாளங்கள் முழங்க காவல் நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் இருந்து குமாரகோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நீதிபதி தீனதயாளன், டி.எஸ்.பி. கணேசன் , ஆய்வாளா் சுதேசன் மற்றும் காவல்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இது போல் கல்குளம் வட்டத்தில் 35 ஊா்களில் இருந்து மலா்காவடி, வேல்காவடி , பறவைக்காவடி என 90-க்கும் மேற்பட்ட காவடி எடுத்து பவனியாக குமாரகோவிலுக்கு கோயிலில் செலுத்தினா்.

தொடா்ந்து, சுவாமிக்கு பால், இளநீா், தேன், தயிா், பன்னீா் , களபம், சந்தனம், பஞ்சாமிா்தம் ஆகியவற்றால் அருள்மிகு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடா்ந்தது அலங்கார தீபாரதனை நடைபெற்றது. பூஜைக்கு பின் கோயில் சாா்பிலும், பக்தா்கள் சாா்பிலும் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை பத்மநாபபுரம் தொகுதி கோயில் கண்காணிப்பாளா் சிவகுமாா், மேலாளா் சுதா்சனகுமாா் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா். காவடி கெட்டை முன்னிட்டு வழி நெடுகிலும் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com