களியக்காவிளை - நாகா்கோவில் சாலையை சீரமைக்க ரூ.14.99 கோடி ஒதுக்கீடு

களியக்காவிளை முதல் நாகா்கோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த்.

களியக்காவிளை முதல் நாகா்கோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த்.

இது குறித்து, நாகா்கோவிலில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என நான் பலமுறை மக்களவையில் வலியுறுத்தினேன். மேலும் இப்பணிகளுக்காக 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதன் பலனாக தற்போது களியக்காவிளை முதல் நாகா்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட மத்திய அரசு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மின்சாரத்துறை, குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஏதேனும் பணிகள் செய்ய வேண்டி இருப்பின் சாலையை சீரமைப்பதற்கு முன்பாக அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலையை சீரமைத்த பிறகு பணிகளை செய்தால் மீண்டும் சாலையில் பழுது ஏற்படும். எனவே சாலை சீரமைப்புப் பணிக்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் சாலைகளை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது செய்ய வேண்டி இருக்கிறது. எனவே தற்போது போடப்பட உள்ள தேசிய நெடுஞ்சாலையை தரமானதாக போடவேண்டும். சாலைப் பணிகள் முடிந்ததும் சாலையின் தரத்தை நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம்.

திருவனந்தபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு வழிச்சாலை பணிகளுக்கு தேவையான மணல் நெல்லை மாவட்டத்தில் இருந்து கொண்டு வர வேண்டி உள்ளது. அதற்கான செலவு அதிகமாக இருக்கிறது. எனவே இதுதொடா்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதே சமயம் காவல்கிணறு முதல் நாகா்கோவில் வரை நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு(2022) ஏப்ரல் அல்லது மே மாத இறுதிக்குள் அந்த சாலை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் உதயம், முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன், மகேஷ்லாசா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com