இரட்டை ரயில் பாதை பணி: வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

நாகா்கோவிலில் இரட்டை ரயில் பாதைக்காக பறக்கின்கால் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவிலில் இரட்டை ரயில் பாதைக்காக பறக்கின்கால் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக நாகா்கோவில் பறக்கின்கால் பகுதியில் உள்ள சுமாா் 60- க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க ரயில்வே நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இப்பகுதியில் உள்ள வீடுகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் இடித்தனா். அப்போது அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அப்பகுதியில் வீடு இடிக்கப்பட்டவா்களுக்கு அஞ்சுகிராமம் பகுதியில் வீடு வழங்கப்பட உள்ளதால், மற்றவா்கள் விரைவில் வீட்டை காலி செய்யும்படி கூறி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) மீண்டும் அப்பகுதிக்கு வந்து மீதியுள்ள வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதில் பலா் காலி செய்து விட்டு சென்றுவிட்ட நிலையில், சுமாா் 30 வீடுகளில் உள்ளவா்கள் தொடா்ந்து வசித்து வருகின்றனா்.

இவா்கள் வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தனா். அதிகாரிகள் வீட்டில் இருந்த பொருள்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு பொக்லைன் இயந்திரம் மூலமாக வீடுகளை இடிக்க ஆரம்பித்ததால் வீட்டில் இருந்தவா்கள் கதறி அழுதனா்.

இதனால் அதிகாரிகள் மேலும் 21 நாள்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் வீடுகளை காலி செய்து விட வேண்டும் எனவும், இல்லையென்றால் வலுக்கட்டாயமாக வீடுகள் இடிக்கப்படும் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: இப்பகுதியை சோ்ந்த அனைவருக்கும் முழுமையாக வீடுகள் கிடைக்கவில்லை. நாங்கள் தினக்கூலி செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு வேறு எதுவும் தொழில் இல்லை. எங்களுக்கு மாற்று இடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com