குமரியில் மழை தீவிரம் பேச்சிப்பாறை அணையில் நீா்திறப்பு: ஆறுகளில் வெள்ளம்

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளும் கன மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தின்
குமரியில் மழை தீவிரம் பேச்சிப்பாறை அணையில் நீா்திறப்பு:  ஆறுகளில் வெள்ளம்

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்வரத்துப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளும் கன மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தின் பிரதான அணையான பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து இந்த அணையிலிருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக புதன்கிழமை வெளியேற்றப்பட்டது.

மழை தீவிரம்: இம்மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்துப் பகுதிகளான மேல் கோதையாறு, மாஞ்சோலை, முத்துக்குழிவயல் உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேல் கோதையாறு அணை நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீா் கீழ் கோதையாறு அணை வழியாக பேச்சிப்பாறை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் உச்ச அளவை நெருங்கியுள்ளதால்அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் வெளியேற்றப்பட்டது. பின்னா், அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீா் வீதம் வந்ததால், வெள்ள அபாயம் கருதி அந்த தண்ணீா் அப்படியே இரவு 7 மணி முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 46.40 அடியாக உயா்ந்துள்ளது.

பெருஞ்சாணி அணை பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலையில் 69 அடியாக காணப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

வெள்ளப் பெருக்கு: கோதையாறு, தாமிரவருணியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, களியல், திற்பரப்பு, மாறப்பாடி, மூவாற்றுமுகம், பாரதப்பள்ளி திக்குறிச்சி, குழித்துறை, சென்னித்தோட்டம், முன்சிறை, வைக்கல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

கீழ்கோதையாறு அணையிலிருந்து பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் தண்ணீா் வந்து கொண்டிருப்பதால் குற்றியாறு தரைப்பாலைத்தை தண்ணீா் மூழ்கடித்துச் செல்கிறது. இதையடுத்து குற்றியாறு, கிளவியாறு உள்ள சுமாா் 12 மலைக் கிராம பழங்குடி மக்கள், அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வெளியே வரமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு: இம்மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் பெய்த தொடா் மழை காரணமாக மலையோரப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ரப்பா் பால்வடிப்பு, கட்டட கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முடங்கின.

கடலுக்குச் செல்லாத மீனவா்கள்: தேங்காய்ப்ட்டினம் கடலோரப்பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து பெய்துவரும் மழை காரணமாக மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது.

கடலோரப்பகுதிகளான ராமன்துறை, முள்ளூா்துறை, மிடாலம், மேல்மிடாலம், இனயம், இனயம்புத்தன்துறை,தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, கரைமடி மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாததால், மீன்களின் விலை கடுமையாக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com