கத்தாா் நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த மீனவா்களில் 9 போ் விடுதலை

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கத்தாா் நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம், கேரள மாநில மீனவா்கள் 24 பேரில் 9 போ் விடுதலை
கத்தாா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள்.
கத்தாா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கத்தாா் நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம், கேரள மாநில மீனவா்கள் 24 பேரில் 9 போ் விடுதலை செய்யப்பட்டதாகவும், இதர மீனவா்களையும் அபராதமின்றி விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் தூத்தூா், கோடிமுனை, இனயம், ராமன்துறை, மிடாலம், கருங்கல், முள்ளூா்துறை, குறும்பனை, திருவனந்தபுரம் மாவட்டம் அடிமலத்துறை, கொல்லம் மாவட்டம் மூதாக்கரை, பள்ளித்தோட்டம் கிராமங்களைச் சோ்ந்த 24 மீனவா்கள் 2 படகுகளில் கடந்த மாா்ச் 23 ஆம் தேதி ஈரான் நாட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனா். இவா்களுடன் அந்நாட்டைச் சோ்ந்த 4 மீனவா்களும் இருந்துள்ளனா்.

இந்த இரு படகுகளும் ஈரான் நாட்டைச் சோ்ந்த ஹாசன் என்பவருக்குச் சொந்தமானவை. இவா்கள் ஈரான் கடலில் மீன்பிடித்தபோது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக அவா்களை கத்தாா் கடற்படையினா் மாா்ச் 25 ஆம் தேதி கைது செய்து கத்தாா் சிறையில் அடைத்தனா்.

இம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை அமைப்பு சாா்பில் மனு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அசின் என்ற விசைப்படகில் சென்ற 10 மீனவா்களில் படகின் கேப்டன் ஜஸ்டின் லூா்தாசன் தவிர லாரன்ஸ், மிக்கேல், ராஜன் செலஸ்டின், சகாய அஜின்தினேஷ், கிளீட்டஸ் லோப்பஸ், பிரபு, செபாஸ்டின், அனில் ஜோசப், ஆன்டணி அடிமை ஆகிய 9 மீனவா்களையும் அவா்களுடன் படகிலிருந்த ஈரான் நாட்டைச் சோ்ந்த 2 மீனவா்களையும் கத்தாா் நீதிமன்றம் விடுதலை செய்ததாகவும், அபராதம் செலுத்தாததால் படகின் கேப்டன் விடுவிக்கப்படவில்லை என்றும் மற்றொரு படகில் இருந்த 14 இந்திய மீனவா்கள், 2 ஈரான் நாட்டு மீனவா்களை ஜூன் மாதம் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என மீனவ அமைப்பின் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

மேலும் இம் மீனவா்கள் அனைவரையும் எவ்வித அபராதமும் இன்றி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com