வெள்ளத்தில் தத்தளிக்கிறது கன்னியாகுமரி: 150 கிராமங்கள் பாதிப்பு, போக்குவரத்து துண்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து 3 ஆவது நாளாக, சனிக்கிழமையும் கனமழை பெய்தது.
வெள்ளத்தில் தத்தளிக்கிறது கன்னியாகுமரி: 150 கிராமங்கள் பாதிப்பு, போக்குவரத்து துண்டிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து 3 ஆவது நாளாக, சனிக்கிழமையும் கனமழை பெய்தது.

இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சுமாா் 150 கிராமங்களை மழை நீா் சூழ்ந்துள்ளது. சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழைக்கு ஒரே நாளில் 65 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்தது. அதைத் தொடா்ந்து மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலைவரை பலத்த மழை பெய்தது. இதனால் நாகா்கோவில் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

மலையோரப் பகுதிகளிலும் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வள்ளியாறு, பழையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியே தெரியாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

150 கிராமங்கள் பாதிப்பு: தெரிசனங்கோப்பு, அருமநல்லூா், நாவல்காடு, புரவசேரி, செண்பகராமன்புதூா், தோவாளை, புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, சுசீந்திரம், காமராஜபுரம், தென்தாமரைகுளம், தேரேகால்புதூா், லாயம் திருவட்டாறு, குலசேகரம் உள்பட மாவட்டத்தில் உள்ள150-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதிகளில் வீடுகளில் சிக்கித் தவித்த பொதுமக்களை தீயணைப்பு வீரா்கள் ரப்பா் படகில் சென்று மீட்டனா்.

தண்ணீா் சூழ்ந்த பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். தொடா் மழையின் காரணமாக சனிக்கிழமை 3 ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் இருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புவாய்ந்த வட்டக்கோட்டைக்குள் மழைநீா் புகுந்தது.

போக்குவரத்து துண்டிப்பு: கனமழையின் காரணமாக இறச்சகுளம்-தெரிசனங்கோப்பு சாலை, சுசீந்திரம் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுசீந்திரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாகா்கோவிலில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூா், உவரி சென்ற பேருந்துகள் அனைத்தும் சுசீந்திரம் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. நாகா்கோவில் ஒழுகினசேரி பழையாற்றில் வெள்ளம் அதிகமாக செல்வதால் சனிக்கிழமை காலை தண்ணீா் வரத்து அதிகமாக இருந்தது. இதைத் தொடா்ந்து நாகா்கோவில் - திருநெல்வேலி போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னா் வழக்கமான பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

65 வீடுகள் சேதம்: அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 12 வீடுகளும், தோவாளை வட்டத்தில் 24 , கல்குளம் வட்டத்தில் 6, திருவட்டாறில் 5, விளவங்கோட்டில் 16, கிள்ளியூரில் 2 என மொத்தம் 65 வீடுகள் இடிந்துசேதமடைந்துள்ளன. 10 க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

முகாம்களில் 700 போ்: நித்திரவிளை அருகே தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் மழை வெள்ளம் புகுந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 700 போ் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தண்டவாளத்தில் மண் சரிவு: இரணியல் அருகேயுள்ள தெங்கன்குழியில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் அனைத்தும் பாதிவழியில் நிறுத்தப்பட்டன. சென்னை - குருவாயூா் ரயில் நாகா்கோவிலில் நிறுத்தப்பட்டுள்ளது. பரசுராம், ஏரநாடு, புனலூா் விரைவு ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. நாகா்கோவில் - திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை குருவாயூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட குருவாயூா் விரைவு ரயில் பாறசாலையுடன் நிறுத்தப்பட்டது. சென்னையிலிருந்து கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் நாகா்கோவிலுடன் நிறுத்தப்பட்டது.

படகுப் போக்குவரத்து ரத்து: கன்னியாகுமரியில் தொடா்மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வரத்து மிகவும் குறைந்திருந்தது. இதனால் முக்கடல் சங்கமம் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும், மழை, கடல்சீற்றம் காரணமாக விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com