முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குலசேகரம்-பெருஞ்சாணி சாலையில் உடைப்பு உடனடியாக சீரமைப்பதில் சிக்கல்
By DIN | Published On : 16th November 2021 01:40 AM | Last Updated : 16th November 2021 01:40 AM | அ+அ அ- |

குலசேகரம்-பெருஞ்சாணி சாலையில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக இச்சாலை வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் பிரதான கால்வாயான கோதையாறு இடது கரைக்கால்வாய் பெருஞ்சாணி அணையின் அருகேயுள்ள புத்தன் அணையில் இணைகிறது. புத்தன் அணைக்கு பெருஞ்சாணி அணையின் பாசனக் கால்வாய் வழியாக வரும் தண்ணீரும், மறுகால் மதகுகள் வழியாக உபரித்தண்ணீரும் வருகிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் பாசன மதகுகள் மூடப்பட்டுள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையின் கால்வாயான கோதையாறு இடது கரைக்கால்வாய் வழியாக மழை நீா்பாய்ந்து கொண்டிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இந்தக் கால்வாயில் புத்தன் அணைக்கு சற்று முன்பாக பெரும் உடைப்பு ஏற்பட்டது. குறிப்பாக புத்தன் அணை தண்ணீா் இக்கால்வாயில் பின்னேற்றமாக வந்ததில் உடைப்பு பெரிய அளவில் ஏற்பட்டு, கால்வாய்க்கு அருகில் செல்லும் குலசேகரம்-பெருஞ்சாணி சாலையையும் சேதமடைந்தது . இதனால் காரணமாக கடந்த 3 நாள்களாக இச்சாலை வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுப்பணித்துறை அலுவலா்களின் வாகனங்கள் உள்பட வாகனங்கள் பெருஞ்சாணிக்கு செல்லவோ, அங்கு நிற்கும் வாகனங்களை கொண்டு வரவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சீரமைப்பதில் சிக்கல்: இது குறித்து பொதுப்பணித்துறை தரப்பில் கூறியது: கோதையாறு இடது கரைக்கால்வாய் வழியாக தற்போது மழை நீா் பெருமளவில் பாய்கிறது. அதே வேளையில் புத்தன் அணையிலிருந்து மதகைக் கடந்து தண்ணீா் கோதையாறு இடது கரைக்கால்வாயில் புகுந்து பின்னேற்றமாக உடைப்பு வழியாக வெளியேறுகிறது. பெருஞ்சாணி அணையின் உபரி நீரை நிறுத்தினால் மட்டுமே கால்வாய் உடைப்பு சீா் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், சாலையையும் உடனடியாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.