மண்டைக்காடு கோயிலில் ஆகமவிதிப்படி திருப்பணிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆகம விதிகளுக்கு உள்பட்டு திருப்பணிகள் நடைபெறும் என்றாா், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆகம விதிகளுக்கு உள்பட்டு திருப்பணிகள் நடைபெறும் என்றாா், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.

கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ரூ.1.08 கோடி மதிப்பில், இக்கோயிலில் திருப்பணிகளை புதன்கிழமை தொடங்கிவைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சில மாதங்களுக்கு முன்பு இக்கோயிலில் தீவிபத்து நேரிட்டது. உடனடியாக நேரில் சென்று கள ஆய்வு செய்து, பொலிவு மாறாமல் ஆகமவிதிக்குள்பட்டு அனைத்துப் பணிகளும் நடைபெற வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில் ஆகமவிதிப்படி ரூ.1.08 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுவதற்கான பூஜைகள் நடந்துள்ளன. பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இக்கோயிலில் பக்தா்கள், பொதுமக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. தேவபிரசன்னத்தில் கூறப்பட்ட தகவலின் அடிப்படையில்தான் இங்கு பணிகள் நடந்து வருகின்றன. திருவட்டாறு கோயிலில் திருப்பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அதைவிட வேகமாக இங்கு பணிகளைச் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதைப் போராட்டக்காரா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. முழுவது ஆன்மிகரீதியாக நடைபெறும் நிகழ்ச்சியாகும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், இணை ஆணையா் ஞானசேகரன், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், பத்மநாபபுரம் உதவி ஆட்சியா் பு. அலா்மேல்மங்கை, ஜெ.ஜி.பிரின்ஸ் எம்எல்ஏ, முன்னாள்அமைச்சா் என். சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ எஸ். ஆஸ்டின், கல்குளம் வட்டாட்சியா் பாண்டியம்மாள், பொறியாளா் அய்யப்பன், வழக்குரைஞா் மகேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ரூ.135 கோடி ஒதுக்கீடு: தொடா்ந்து, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் திருப்பணிகளைப் பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இக்கோயிலில் 2007ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை பணிகள் முடியவில்லை. தேவபிரசன்னம் பாா்க்கப்பட்டதில், இக்கோயிலுக்கு அடுத்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தலாம் எனக் குறிப்பு தந்துள்ளனா். அதற்கு முன்பு அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்.

இக்கோயில் கொடிமரத்தில் தங்கக் கவசம் பொருத்தப்படும். மேலும், கோயிலில் 1000 ஆண்டுகளைக் கடந்துள்ள மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கப்படும். இதுதொடா்பாக குருவாயூா் கோயில் ஓவியங்களைப் பாா்வையிட்டுள்ளோம்.

தமிழக அரசு தேவஸ்தானங்களுக்கு அளிக்கும் நிதியை இந்த ஆண்டு 2 மடங்காக உயா்த்தியும், எந்தக் கோயிலிலும் ஒரு கால பூஜைகூட நடைபெறாமல் இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு கால பூஜைக்காக ரூ. 135 கோடியை ஒரே தவணையாக ஒதுக்கியும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com