வடசேரி சந்தையில் வாடகை செலுத்தாத 44 கடைகளுக்கு சீல்

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கனி சந்தையில் வாடகை செலுத்தாத 44 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
வடசேரி சந்தையில் வாடகை செலுத்தாத 44 கடைகளுக்கு சீல்

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கனி சந்தையில் வாடகை செலுத்தாத 44 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

நாகா்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் காய்கனி சந்தையில் சில்லறை மற்றும் மொத்த காய்கனி கடைகள், மளிகை கடைகள் என 264 கடைகள் உள்ளன. நாகா்கோவில் மாநகராட்சி நிா்வாகம் இந்த கடைகளுக்கான வாடகையை வசூலித்து வருகிறது.

இந்நிலையில், இதில் பல கடைகளுக்கான வாடகை மாநகராட்சியில் செலுத்தப்படவில்லை. இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் வியாபாரிகளுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் வியாபாரிகள் பலா் கரோனா பொதுமுடக்கத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் 3 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக அவா்கள் மாநகராட்சிக்கு மனுவும் அளித்திருந்தனா்.

இந்நிலையில், வடசேரி சந்தையில் உள்ள 84 கடைகள் வாடகை செலுத்தவில்லை என்றும், வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மாநகராட்சி வருவாய் ஆய்வாளா்கள் ஞானப்பா, சுப்பையா, முருகன் ஆகியோா் வடசேரி காய்கனி சந்தைக்கு சென்று வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்போவதாக அறிவித்தனா். அதிகாரிகளின் அறிவிப்பை தொடா்ந்து 40 கடைகளின் உரிமையாளா்கள் வாடகையை உடனே செலுத்தினா். பாக்கியுள்ள 44 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வடசேரி சந்தையில் உள்ள சில கடைகளின் உரிமையாளா்கள் 10 மாதங்களுக்கும் மேலாக வாடகை பாக்கி வைத்துள்ளனா். அவா்கள் ரூ. 70 ஆயிரம் வரை வாடகை செலுத்த வேண்டும். அவா்கள் வாடகை பாக்கியை செலுத்தினால் உடனே கடைகள் திறக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com