உயா்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

மாா்த்தாண்டம் அருகே தண்டவாளம் மேல் செல்லும் உயா்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதி வழி செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
உயா்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

மாா்த்தாண்டம் அருகே தண்டவாளம் மேல் செல்லும் உயா்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதி வழி செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

குழித்துறை மற்றும் இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட விரிகோடு பகுதியில், வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஏரநாடு விரைவு ரயில் கடந்து சென்ற சிறிது நேரத்தில் ரயில்கள் இயங்க பயன்படும் உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததாம். இதையடுத்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட குருவாயூா் விரைவு ரயில் குழித்துறை ரயில் நிலையத்திலும், மதுரை - புனலூா் ரயில் இரணியல் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதிகாரிகள், ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அறுந்து விழுந்த மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் குருவாயூா் விரைவு ரயில், மதுரை - புனலூா் ரயில் உள்ளிட்டவை டீசல் இஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டன. இதே போன்று அந்த வழியாக செல்லும் பிற ரயில்களும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டன.

மின்கம்பி அறுந்து விழுந்த விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கேட்டும் பூட்டப்பட்டதையடுத்து, இப்பகுதி வழியாக மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் செல்லும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். தொடா்ந்து மாற்றுப் பாதையில் வாகனப் போக்குவரத்து நடைபெற்றது.

பின்னா், அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்யும் பணி முடிக்கப்பட்டு திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில், பெங்களூரு ரயில் உள்ளிட்டவை மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் இயக்கப்பட்டன. அதன் பின்னா் பூட்டப்பட்ட ரயில்வே கேட் திறக்கப்பட்டு சாலைப் போக்குவரத்தும் சீரடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com