முழு ஊரடங்கு: எல்லையோர பகுதியில் தீவிர வாகன சோதனை

தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் 3 ஆவது வார ஞாயிற்றுக்கிழமை (ஜன. 23) தளா்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

கேரளத்திலிருந்து பாரம் இன்றி வந்த லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை கேரளத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 3 ஆவது அலை வேகமாக பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து இரவுநேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை தளா்வுகளற்ற முழு ஊரடங்கையும் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளத்திலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக களியக்காவிளை, மாா்த்தாண்டம் மற்றும் கேரள பகுதியான பாறசாலை உள்ளிட்ட பகுதி சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கேரளத்திலிருந்து வந்த லாரிகள், இருசக்கர வாகனங்களை குமரி மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி மறுத்து கேரளத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தனா். இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் வந்த காா் உள்ளிட்ட வாகனங்களை குமரி மாவட்டத்துக்குள் நுழைய அனுமதியளித்தனா்.

இதே போன்று களியக்காவிளை அருகேயுள்ள கோழிவிளை, கொல்லங்கோடு அருகே சூழால், காக்கவிளை உள்ளிட்ட எல்லையோர பகுதி சோதனைச் சாவடிகளிலும் போலீஸாா் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com