முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
களியக்காவிளை அருகே கொலை வழக்கில் 3 போ் கைது
By DIN | Published On : 06th April 2022 01:04 AM | Last Updated : 06th April 2022 01:04 AM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
நித்திரவிளை அருகேயுள்ள பணமுகம் பகுதியைச் சோ்ந்த ராஜூ மகன் அஜின் (26). இவரும் களியக்காவிளை அருகே பொன்னப்பநகா் பகுதியைச் சோ்ந்த ஜோய் மகன் ஷிஜி (43) என்பவரும் மாா்ச் 26 ஆம் தேதி இரவில் களியக்காவிளை அருகே அன்னிக்கரை பகுதியில் பேசிக்கொண்டு நின்றிருந்தனராம்.
அப்போது ரேஷன் அரிசியுடன் கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரில் வந்த கும்பல் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட போலீஸாா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இச் சம்பவம் குறித்து களியக்காவிளை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பான மோதலில் இச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இது குறித்து களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் மேற்குவிளை டென்னிசன் மகன் ஜோஸ் (22), மாராயபுரம், பாறவிளை பாலையன் மகன் மகேந்திர குமாா் (48) உள்ளிட்ட சிலா் மீது களியக்காவிளை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்தனா்.
இந் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிஜி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை பிடிக்க தக்கலை டிஎஸ்பி கணேசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட செம்மங்காலை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கிளாம் (26), குளப்புறம் வரவிளை டென்னிசன் மகன் ஜஸ்டின் ஜோசப்ராஜ் (38) மற்றும் மகேந்திரகுமாா் ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.