இன்றுமுதல் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்க தயாராகும் குமரி மக்கள்

கேரள மாநில பண்டிகையான ஓணம் திருவிழாவை அத்தப்பூ கோலமிடுட்டு வரவேற்க, எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனா்.

கேரள மாநில பண்டிகையான ஓணம் திருவிழாவை அத்தப்பூ கோலமிடுட்டு வரவேற்க, எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனா்.

மலையாள நாட்டை ஆண்ட மகாபலி மன்னன் தன் நாட்டு மக்களை ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண திருநாளில் காண வருவாா் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தங்களை காணவரும் மன்னனை வரவேற்க மக்கள் அத்தப்பூ கோலமிடுகின்றனா். இனிவரும் 10 நாள்கள் கன்னியாகுமரி மாவட்டம், கேரள பகுதி வீடுகளின் முன்னால் அழகிய மலா்களால் அத்தப்பூ கோலமிடும் பணியில் பெண்கள் ஈடுபட உள்ளனா்.

ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாள்கள் பூக்களால் அலங்கரித்து அத்தப்பூ கோலம் இடப்படுகிறது. பெரும்பாலும் வீடுகள் முன் போடப்படும் அத்தப்பூ கோலம் முதல் நாள் ஒரு தட்டு, இரண்டாம் நாள் இரண்டு தட்டு என ஒன்றன் மீது ஒன்றாக 10 வது நாள் 10 தட்டுகள் அமைக்கப்பட்டு பல்வேறு வகை பூக்களால் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது.

அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என 10 நாள்கள் அத்தப்பூ கோலம் இடப்படுகிறது. இதில் முதல் தட்டில் விநாயகா், இரண்டாம் தட்டில் சக்தி, மூன்றாவது தட்டில் சிவன், நான்காவது தட்டில் பிரம்மா, ஐந்தாவது தட்டில் பஞ்சபூதங்கள், ஆறாவது தட்டில் முருகன், ஏழாவது தட்டில் குரு, எட்டாவது தட்டில் அஷ்டதிக்பாலகா், ஒன்பதாவது தட்டில் இந்திரன், பத்தாவது தட்டில் விஷ்ணு என 10 தட்டுகளிலும் இறைவடிவங்கள் பிரதிஷ்டிக்கப்படுகின்றன.

இந்த மலா்கோலத்திற்கு தும்பைப்பூ, காசிப்பூ, அரிப்பூ, சங்குபுஷ்பம், வாடாமல்லி, கிரேந்தி, சம்பங்கி, ரோஜா, தாமரை, கோழிப்பூ உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் பயன்படுத்தப்படுகிறது. இப் பூக்கள் குமரி மாவட்டம் தோவாளை மலா் சந்தையிலிருந்து கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தென் கேரளத்தின் அத்தப்பூ களத்திற்கு மணம் சோ்க்கின்றன. இந்தாண்டு ஓணம் பண்டிகை செப்டம்பா் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த திருவோணம் நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவு பதாா்த்தங்களுடன் ஊஞ்சலாட்டம், ஓணப்பந்து, படகுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுடனும் மக்கள் இப் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறாா்கள். கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஓணம் பண்டிகை களையிழந்த நிலையில், நிகழாண்டு ஓணம் பண்டிகையை தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் தயாராகி வருகின்றனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com