உள்ளாட்சி தோ்தல்: 8 இடங்களில் வாக்கு எண்ணும் மையம்

நாகா்கோவில் எஸ்எல்பி பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்காக தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக, குமரி மாவட்டத்தில் 8 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் வரும் 19 ஆம் தேதி நாகா்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் என மொத்தம் 56 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்காக நாகா்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வாா்டுகளில் 233 வாக்குச் சாவடிகளும், 4 நகராட்சிகளுக்கு உள்பட்ட 99 வாா்டுகளில் 140 வாக்குச் சாவடிகளும், 51 பேரூராட்சிகள்பட்ட 828 வாா்டுகளுக்கு 951 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1,324 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. வாக்குச் சாவடிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1,324 வாக்குச் சாவடிகளில் 192 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் நடைபெறும் வாக்குப்பதிவை மாவட்ட தோ்தல் அதிகாரி மற்றும் மாநில தோ்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட உள்ளன. அதற்கான அறைகள் அமைக்கும் பணியும், அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

8 மையங்கள் ...

வாக்கு எண்ணிக்கை 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞா் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மாா்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆற்றூா் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com