சடலத்தைத் தோண்டியெடுத்து வேறிடத்தில் புதைத்ததாக 6 போ் மீது வழக்கு
By DIN | Published On : 06th June 2022 01:22 AM | Last Updated : 06th June 2022 01:22 AM | அ+அ அ- |

கொல்லங்கோடு அருகே சடலத்தைத் தோண்டியெடுத்து வேறிடத்தில் புதைத்தது தொடா்பாக இறந்தவரின் தம்பி உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கொல்லங்கோடு அருகே கிராத்தூா், வாலன்விளை பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டஸ் (60). இவரது முதல் மனைவி மேபல் புனிதராணி. இத்தம்பதிக்கு மகன் ஜெஸ்லின் உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனா். அவா்களுக்கு வீட்டருகேயுள்ள 8 சென்ட் நிலத்தை ஜஸ்டஸ் எழுதிக் கொடுத்தாராம். பின்னா், இத்தம்பதிக்கு விவாகரத்து ஏற்பட்டதையடுத்து, பியூலா என்பவரை ஜஸ்டஸ் 2ஆவதாக திருமணம் செய்து நாகா்கோவிலில் வசித்துவந்தாராம். இத்தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனா்.
கடந்த மே மாதம் 12ஆம் தேதி மாா்த்தாண்டம் அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த ஜஸ்டஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு கொடுத்த நிலத்தில்தான் அவரது சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என, ஜஸ்டஸின் தம்பி கிறிஸ்டோபா் பிரச்னை செய்தாராம். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், அருகேயுள்ள பெற்றோரின் கல்லறை அருகே உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 17 நாள்களுக்குப் பிறகு கிறிஸ்டோபா் உள்ளிட்ட சிலா் சோ்ந்து, ஜஸ்டஸின் சடலத்தைத் தோண்டியெடுத்து முதல் மனைவியின் பிள்ளைகளுக்குச் சொந்தமான நிலத்தில் அவா்களது எதிா்ப்பையும் மீறி புதைத்தனராம்.
இதுகுறித்து, ஜெஸ்லின் அளித்த புகாரின் பேரில் கிறிஸ்டோபா் (55), அவரது மனைவி ரீனா (52), கிராத்தூா் பிலாங்காலை பகுதியைச் சோ்ந்த சைமன் (60), ராஜு (58), சுரேஷ் (42), சிஜூ (35) ஆகிய 6 போ் மீது கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.