தேங்காய்ப்பட்டினத்தில் வள்ளம் கவிழந்து மீனவா் பலி:சடலத்துடன் மீனவா்கள் தா்னா
By DIN | Published On : 01st September 2022 12:10 AM | Last Updated : 01st September 2022 12:10 AM | அ+அ அ- |

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் வள்ளம் கவிழ்ந்து பலியான மீனவரின் சடலத்தை குளிரூட்டும் பெட்டியில் வைத்து மீனவா்கள் நிவாரணம் கேட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகமானது சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டில் சிக்கி படகுகள் கவிழ்ந்து மீனவா்கள் பலியாவது தொடா்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 25க்கு மேற்பட்ட மீனவா்கள் இறந்துள்ளனராம். கடந்த மாதம் 11-ஆம் தேதி பூத்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற சைமன் முகத்துவாரத்தில் சிக்கி பலியானாா்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இனயம் புத்தன்துறையைச் சோ்ந்த அமல்ராஜ் (67) சிறிய வள்ளத்தில் மீன்பிடிக்க சென்று விட்டு துறைமுகத்துக்கு திரும்பிய போது, வள்ளம் திடீரென கவிழ்ந்து கடலில் தவறி விழுந்துள்ளாா். சக மீனவா்கள் காப்பாற்ற முயற்சி செய்த போதும் முடியவில்லையாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை துறைமுகம் பகுதியில் அமல்ராஜின் சடலத்தை மீனவா்கள் மீட்டனா். பின்பு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வழங்காமல், குளிரூட்டும் பெட்டியில் சடலத்தை வைத்து 1000 க்கும் மேற்பட்ட மீனவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளா் தங்கராமன், கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜேஷ் ஆகியோா் மீனவப்பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.