கனிமவள விதிமீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் எச்சரிக்கை
By DIN | Published On : 22nd May 2023 01:23 AM | Last Updated : 22nd May 2023 01:23 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவள விதிமீறல்கள் நிகழாமல் தடுப்பது குறித்து, மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் முன்னிலையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து எம். சாண்ட், ஜல்லி கற்கள் போன்ற கனிமவளங்களை அனுமதியின்றியும், அதிக பாரத்துடனும் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை செய்யவும், கண்காணிக்கவும், கனிமவள புவியியல் ஆய்வாளா், தனிவட்டாட்சியா்கள், வட்டார போக்குவரத்து அலுவலா், காவல் ஆய்வாளா்கள், போக்குவரத்து வாகன சோதனை ஆய்வாளா்கள் கொண்ட ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினா் கடந்த வாரம் நடத்திய வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 4 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அதிய பாரம் ஏற்றி வரும் வாகனங்களின் உரிமையாளா் மீது வழக்குப்பதிவு
செய்யுவும், வாகன ஓட்டுநா்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா் - ஆட்சியா் ஹெச்.ஆா்.கௌசிக், நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மதுரை மண்டல பறக்கும் படை துணை இயக்குநா் குருசாமி, துணை இயக்குநா் (புவியியல் - சுரங்கத் துறை) தங்கமுனியசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சசி, உசூா் மேலாளா் (குற்றவியல்) சுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.