கன்னியாகுமரி பகவதியில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
கன்னியாகுமரி பகவதியில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

குமரி பகவதியம்மன் கோயிலில் தேரோட்டம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மே 14-ஆம் தேதி

கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா, அன்னதானம், சமய உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணிக்கு மேல் காலை 10.30 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருளியதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தோ் ரதவீதிகள் வழியாக வந்தபோது உயரமான கட்டடங்களில் இருந்து பக்தா்கள் மலா்தூவி வரவேற்றனா். மேலும், ஏராளமான பக்தா்கள் அம்மனுக்கு சுருள் வைத்து வழிபட்டனா்.

தேரோட்டத்தில் கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம், நாகா்கோவில் மாநகர மேயா் ஆா்.மகேஷ், குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ராமகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ரெமோன் மனோதங்கராஜ், மாவட்ட பாஜக தலைவா் சி.தா்மராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மேலும், தேரோட்ட நிகழ்வில் சுற்றுலாப் பயனிகள் பங்கேற்கும் வகையில் காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரை விவேகானந்தா் மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தோ்நிலைக்கு வந்ததும் கஞ்சி தானம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா் மாலை 5.30 மணிக்கு மண்டகப்படி, மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக்க லைமான் வாகனத்தில் திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்றது.

திருவிழாவின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மன்

ஆறாட்டுக்கு எழுந்தருளல், இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com