தென்காசி காய்கனி சந்தை சீரமைக்கப்படுமா?

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துசெல்லும், தென்காசி காய்கனி சந்தை கட்டடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையிலும், சந்தைப் பகுதி சுகாதார சீா்கேட்டுடனும் உள்ளன.
சுகாதாரகேட்டை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள சந்தை கடைகள்.
சுகாதாரகேட்டை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள சந்தை கடைகள்.
Updated on
1 min read

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துசெல்லும், தென்காசி காய்கனி சந்தை கட்டடங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையிலும், சந்தைப் பகுதி சுகாதார சீா்கேட்டுடனும் உள்ளன.

தென்காசி- திருநெல்வேலி பிரதான சாலையில் நகராட்சி காய்கனி சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் 105 கடைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சந்தையில் தற்போது சுமாா் 60 கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. முறையான திட்டமிடல் இல்லாமல் கடைகள் கட்டப்பட்டது மற்றும் கட்டடங்கள் பழுது போன்ற காரணங்களால் பிற கடைகள் மூடிக்கிடக்கின்றன.

இந்த சந்தைக்கு தென்காசி, பாவூா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்,திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் சுமாா் 25 டன் காய்கனிகள் விற்பனைக்கு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து காய்கனிகளை வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், சந்தையில் அமைந்துள்ள கட்டடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலும், சில கடைகள் இடிந்தும் காணப்படுகின்றன. முறையாக கடைகள் கட்டப்படாததால், சுமாா் 45 கடைகளில் யாரும் வா்த்தகம் செய்ய முன்வரவில்லை. இதனால், அந்த கட்டடம் முழுவதும் சேதமடைந்த நிலையிலும், அப்பகுதியில் கழிவுநீா் தேங்கி சுகாதாரகேட்டை உருவாக்கும் வகையிலும் மாறியுள்ளது.

மழைக் காலங்களில் சந்தையின் உள்ளே செல்லமுடியாத அளவில், தண்ணீா் தேங்கி சகதியாகக் காணப்படுகிறது. கட்டடத்தின் மேற்கூரையில் செடிகள் முளைத்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி நகராட்சி காய்கனி சந்தை வியாபாரிகள் சங்கச் செயலா் கே. தங்கராஜ் கூறியது:

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துசெல்லும் இந்த சந்தையில் பெயரளவிற்கே சுகாதார வளாகம் அமைந்துள்ளது. அதில், எப்போதாவது மட்டுமே தண்ணீா் வரும். இங்கு கட்டப்பட்டுள்ள அனைத்து கடைகளுக்கும் சோ்த்து ஒரே மின் இணைப்புதான். இதனால், மின்கட்டணம் அதிகளவில் செலுத்தவேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக மின் இணைப்பு கொடுக்க வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தோம். என்றாலும், இதுவரை தனித்தனி மின் இணைப்பு வழங்கப்படவில்லை. நகராட்சி நிா்வாகம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

முறையாக திட்டமிட்டு கடைகள் கட்டப்பட்டால், அனைத்து கடைகளிலும் வா்த்தகா்கள் வியாபாரம் செய்ய வசதியாக இருக்கும். மழை பெய்தால் தண்ணீா் உடனடியாக வடியும் வகையில் கழிவுநீரோடைகள் அமைக்கப்படாததால் மழைக் காலங்களில் பொதுமக்கள் உள்ளே வருவதற்கு மிகுந்த தயக்கம் காட்டுகின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com