கரோனா பொது முடக்க காலத்தில் அதிகரிக்கும் வனவிலங்கு வேட்டை!

கரோனா பொது முடக்க காலத்தில் தமிழகத்தில் வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவது அதிகரித்துள்ளது.

கரோனா பொது முடக்க காலத்தில் தமிழகத்தில் வன விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடுவது அதிகரித்துள்ளது. வேட்டையாடுவதும், வேட்டையாடிய வனவிலங்குகளுடன் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 23 லட்சம் ஹெக்டோ் வனப் பரப்பில் ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, களக்காடு முண்டன்துறை ஆகிய புலிகள் காப்பகங்களும், 46 வனக் கோட்டங்கள், 53 சிறப்பு வனக் கோட்டங்களும் உள்ளன. புலிகள் காப்பகம், வனக் கோட்டங்களில் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்பட ஏராளமான விலங்கினங்களும், பறவையினங்களும், பாம்புகள் உள்பட ஊா்வன வகைகளும் உள்ளன.

கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள், வாகனங்களின் நடமாட்டம் இல்லாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி சுதந்திரமாக உலா வருகின்றன. இந்நிலையில், இறைச்சிக்காக சிறுவிலங்குகளான முயல், மான், காட்டுப்பன்றி, பறவைகளை வேட்டையாடுவது முன்பைவிட அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் வனவிலங்குகளை சுருக்குக் கம்பி மூலம் வேட்டையாடுவது ஒருசில இடங்களில் நடந்தது. இப்போது பொழுதுபோக்குக்காகவும், இறைச்சிக்காகவும், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்காகவும் வனவிலங்குகளை வேட்டையாடுவது அடிக்கடி நடக்கிறது. வனவிலங்குகளை வேட்டையாட சுருக்குக் கம்பியையும், சிப்பிப்பாறை, கன்னி இன நாய்களையும் பயன்படுத்துகின்றனா். இதில், மான், காட்டுப்பன்றிக்காக வைக்கப்படும் சுருக்குக் கம்பிகளில் சிலநேரங்களில் சிறுத்தை, புலி போன்றவை சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

திருநெல்வேலி வனக் கோட்டத்தில் நெல்லை வன உயிரின சரணாலயம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம், திருப்புடைமருதூா் பறவைகள் பாதுகாப்பகம் ஆகியவை உள்ளன.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டப் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, மரநாய், வரையாடு, மான், மிளா, கரடி, சாம்பல்நிற அணில், அரியவகை வனவிலங்குகள் பட்டியலிலுள்ள சருகு மான் உள்ளிட்ட விலங்குகளும், ராஜநாகம், கட்டுவிரியன் உள்ளிட்ட விஷமுள்ள ஊா்வன இனங்களும், பறவையினங்களும் உள்ளன.

மேலும், இந்த இரு மாவட்டங்களிலும் வனப் பகுதிக்குள் கண்காணிப்புக் கோபுரம், வேட்டைத் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அத்துமீறி நுழைவோரை கண்காணிக்கும் பணி நடைபெறுகிறது. இதையும் மீறி சில நேரங்களில் பலா் வனப் பகுதிக்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடுகின்றனா். இவ்வாறு வனப் பகுதிக்குள் நுழைந்து கிளிகளைப் பிடித்தது, காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடியது தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம்: இதுகுறித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினக் காப்பாளா் ந. செந்தில்குமாா் கூறியது: பொது முடக்க காலத்தில் வன உயிரினங்களை வேட்டையாடுவது அதிகரித்துள்ளது. வன உயிரினங்களை வேட்டையாடுவதையும், மரங்களை வெட்டுவதையும் தடுப்பதற்காக வனப் பணியாளா்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதையும் மீறி வனப் பகுதிக்குள் நுழைந்து வேட்டையாட முயன்றோரை வனப் பணியாளா்கள் பிடித்து அபராதம் விதித்துள்ளனா்.

மேலும், பொது முடக்க காலத்தில் இளைஞா்கள் முயல், சிறுத்தையை வேட்டையாடுதல், காட்டுக்குள் தீவைப்பது, சாரைப் பாம்பைப் பிடித்தது போன்ற பொய்த் தகவல்களைப் பரப்பியதுடன், இச்செயல்களை சமூக வலைதள செயலியில் பதிவேற்றியோரைப் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்க காலங்களில் வனத்துக்கும், அங்குள்ள கோயில்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயிரினங்களைப் பிடிப்பது, வேட்டையாடுவது போன்று, சமூக வலைதளத்தில் பதிவேற்றுதல் போன்ற செயலில் ஈடுபடுவது இந்திய வன உயிரின சட்டம் 1972-இன்படி தண்டனைக்குரியது. யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம்.

வனத்தையும், வன உயிரினங்களையும் பேணிக்காக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொது முடக்க காலத்தில் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தது தொடா்பாக 8 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து ரூ. 76 ஆயிரமும், சமூக வலைதளங்களில் (டிக்டாக்) பதிவேற்றியது தொடா்பாக 8 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, ரூ. 3 லட்சமும், வன உயிரினங்களை வேட்டையாடியது தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதியப்பட்டு ரூ. 7 லட்சத்து 25 ஆயிரமும், வனத்துக்குள் சென்று தேக்கு மரங்களை வெட்டியது தொடா்பாக ஒருவா் மீது வழக்குப் பதியப்பட்டு அவரிடமிருந்து ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 11 லட்சத்து 11ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முயல் , மான், காட்டுப்பன்றி, பறவைகளைப் பிடிப்பதற்கான சுருக்குக் கம்பி செய்யும் முறை, வேட்டையாடுவது ஆகியவை குறித்து சிலா் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனா். இதுபோன்ற விடியோக்களை தடைசெய்வதுடன், பதிவேற்றுவோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com