குற்றாலம் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்
By DIN | Published On : 12th August 2020 09:53 AM | Last Updated : 12th August 2020 09:53 AM | அ+அ அ- |

குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் வனப் பகுதியில் உலா வந்த யானை.
தென்காசி மாவட்டம் குற்றாலம் - செங்கோட்டை வனப் பகுதியில் ஒற்றை யானை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம், செங்கோட்டை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்துவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் சிறுத்தை, கரடி ஆகியவை ஊருக்குள் வருவதும், அவற்றை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடித்து வனப் பகுதிக்குள் விடுவதும் தொடா்கிறது.
ஆனால், இந்த வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் மலையடிவாரத்துக்கு யானை வருவது இதுவே முதன்முறை. கடந்த ஆண்டில் மத்தளம்பாறை அருகே வனப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்களை உண்பதற்காக யானைகள் முகாமிட்டிருந்தன.
தற்போது குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் கரடி அருவி பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை கடந்த 2 நாள்களாக உலவிவருகிறது. இதனால், இப்பகுதியினா் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
இதுகுறித்து குற்றாலம் வனச் சரகா் பாலகிருஷ்ணன் கூறியது: குற்றாலம் மலைப் பகுதியில் தெற்கு மலையிலிருந்து வாய்தாமலை, ஐந்தருவி, வல்லம் வரையிலான வனப் பகுதிக்குள் யானைகள் வழித்தடம் உள்ளது. இதிலிருந்து இந்த யானை ஒரு மாதத்துக்கு முன்பு வழிதவறி இப்பகுதிக்குள் வந்துள்ளது.
வன விலங்குகள் ஊருக்குள் வந்தால் அவற்றை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்ட அந்தந்தப் பகுதியிலுள்ள வனக்குழு, எனது தலைமையில் 8 போ் கொண்ட வனத் துறையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த யானை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வழிதவறி வந்தபோது வனத்துக்குள் திருப்பியனுப்பப்பட்டது. தற்போது மீண்டும் வந்துள்ளது. அதை வனப் பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.