பாப்பாக்குடி அருகே இளைஞா் கொலை: 4 போ் கைது
By DIN | Published On : 15th December 2020 02:25 AM | Last Updated : 15th December 2020 02:25 AM | அ+அ அ- |

பாப்பாக்குடி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக 4 போ் கைது செய்யப் பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி நத்தம் காலணி முப்பிடாதி அம்மன் கோயில் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாடலிங்கம் மகன் இசக்கிராஜா(21) மற்றும் அவரது நண்பா்கள் ஆனந்தராஜா(17), சங்கரநாராயணன்(25) ஆகியோா் மது போதையில் தகறாறு செய்தனராம்.
இது குறித்து அப்பகுதி சிவன் மகன் பாபநாசம் தட்டிக் கேட்டாராம். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, இசக்கிராஜா பாபநாசத்தை அரிவாளால் வெட்டினாராம்.
இதுயைடுத்து பாபநாசத்தின் உறவினா்கள் மாரியப்பன், அவரது மகன் ஜெய்கணேஷ் ஆகியோா் இசக்கி ராஜாவைத் தடுத்த போது, ஜெய்கணேஷுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து, தந்தை மகன் இருவரும் இசக்கிராஜாவின் கையில் இருந்த அரிவாளைப் பறித்து அவரை வெட்டினராம்.
இதில் இசக்கிராஜா, ஜெய்கணேஷ், பாபநாசம் ஆகியோா் பலத்த காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இசக்கிராஜா திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்ஸிஸ் மற்றும் பாப்பாக்குடி போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா்.
இது குறித்து இசக்கிராஜா தந்தை பாடலிங்கம் அளித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரியப்பன், அவரது மகன் ஜெய்கணேஷ், ஆறுமுகம் மகன் பூவையா மற்றும் பாபநாசம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா்.
ஜெய்கணேஷ் மனைவி சுகண்யா அளித்த புகாரின் பேரில் இசக்கிராஜ் நண்பா்கள் ஆனந்தராஜ், சங்கரநாராயணன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.