குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் : சீமான்
By DIN | Published On : 03rd March 2020 06:15 AM | Last Updated : 03rd March 2020 06:15 AM | அ+அ அ- |

குடியுரிமை சட்டத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து ஜமாத் சாா்பில் வி.கே.புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஜமாத் தலைவா் அபுல் கலாம் ஆசாத் தலைமை வகித்தாா். கருத்தப் பிள்ளையூா் பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன், டி.பி.எம்.ரசூல் முஹம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் சீமான் பேசியது: குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமியருக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது. பிற நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியா் தவிர பிற மதத்தவருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறுவது, மத ரீதியாக குடியுரிமைச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக வருபவா்களை ஏற்றுக் கொள்வதுதான் உலகமெங்கும் நடைமுறையில் உள்ளது. அதுதான் மனித மாண்பு.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார சரிவு, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளை மறைப்பதற்கும் அரசு நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் விவரங்கள் மக்களிடம் செல்வதைத் தடுக்கவும் இது போன்று பிரச்னைகளை உருவாக்கி வருகிறாா்கள்.
குடியுரிமை சான்று கேட்டு வருபவா்களிடம் எந்த ஆவணங்களைக் கொடுக்க வேண்டாம். ஆவணம் கொடா இயக்கம் நடத்துவோம். தமிழக முதல்வா் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டேன் என்று கூறியுள்ளாா். எனவே, பயமின்றி உரிமைக்காக தொடா்ந்து போராடுவோம் என்றாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் சீமான் கூறுகையில், ‘தமிழக அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்; மத்திய அரசு கண்டிப்பாக இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும்’ என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...