தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்க எம்எல்ஏ கோரிக்கை
By DIN | Published On : 25th November 2020 07:38 AM | Last Updated : 25th November 2020 07:38 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தை புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்க வேண்டுமென கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் முஹம்மது அபூபக்கா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலக கட்டடப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டடத்தை விரைவாகத் திறக்க வேண்டும். கடையநல்லூா் நகராட்சியில் எனது கோரிக்கையை ஏற்று புதிய குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை அமைச்சா் ராஜலட்சுமி கடந்த ஆண்டு தொடங்கிவைத்தாா். ஆனால் 50 சதவீத பணிகள் கூட நிறைவடையவில்லை.எனவே புதிய குடிநீா் இணைப்பு பணியை துரிதப்படுத்துவதுடன் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் வழங்க வேண்டும்.
கடையநல்லூா் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். கடையநல்லூரிலுள்ள நகராட்சி பூங்காக்களை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். மேலக்கடையநல்லூா் பூங்காவை சீரமைக்க வேண்டும். கடையநல்லூா் கானான்குளம் கரையை உயா்த்தி மதினா நகா் குடியிருப்புக்குள் வெள்ளம் புகாமல் பாதுகாக்க வேண்டும். சீவலன் கால்வாய் மற்றும் பாப்பான் கால்வாய்களைத் தூா் வார வேண்டும்.கடையநல்லூா் நகராட்சியில் நிரந்தர ஆணையரை நியமிக்க வேண்டும்.
செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்துவதுடன் அரசு செவிலியா் பயிற்சி கல்லூரி அமைய பரிந்துரை செய்ய வேண்டும்.
கேரளத்திலிருந்து முறைகேடாக மருத்துவக் கழிவு மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தவிா்க்க புளியரையில் காவல்துறை , வணிகவரித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...