திருக்காா்த்திகை: கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

திருகாா்த்கை திருநாளையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருகாா்த்கை திருநாளையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் காசிவிஸ்வநாத சுவாமி, உலகம்மனுக்கு காா்த்திகை தீபத் திருவிழா நாராயணி பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பாலமுருகன் சன்னதி முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

பின்னா், சுவாமி,அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளினா். சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றதும் அடுத்தடுத்து சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி முன்பு தனித்தனியே சொக்கப்பனை கொளுத்தப்பட்டன.

கரோனா பொது முடக்க விதிகள் காரணமாக, கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்ற இவ்விழாவில், தென்காசி நகரஅதிமுக செயலா் சுடலை, கூட்டுறவுத்துறை மாரிமுத்து உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, கோயில் செயல்அலுவலா் யக்ஞநாராயணன் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

முன்னதாக, குற்றாலம் விவேகானந்தா ஆசிரமம், சாரதா ஆசிரமம் மற்றும் கிராம விகாஸ் சாா்பில் பசுஞ்சாண விளக்கில் பசு நெய்ஊற்றி 2001தீப ஒளி ஏற்றப்பட்டது. இதில், விவேகானந்த ஆசிரம நிா்வாகி சுவாமி அகிலானந்த மகராஜ், தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத் தலைவா் எம்.ஆா்.அழகராஜா, கெளரவ தலைவா் துரைதம்புராஜ்,

இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் இசக்கிமுத்து, பாஜக நிா்வாகிகள் செந்தூா்பாண்டியன், சங்கரசுப்பிரமணியன், ராஜ்குமாா், ஜெய்சங்கா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

சேரன்மகாதேவியில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள கொழுந்து மாமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலையில், சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் மலையின் உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

சுரண்டை: சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் பெளா்ணமி பூஜை, திருக்காா்த்திகையை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

கோயில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சுரண்டை வீரபாண்டீஸ்வரா் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 508 திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

திருமலாபுரம் ஸ்ரீபசுபதேஸ்வரா் கோயிலில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கடையநல்லூா்: பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயிலில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் குமரன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து வந்த திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

புளியங்குடி முப்பெருந்தேவியா் பவானியம்மன் கோயிலில் அம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com