‘பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 03rd October 2020 12:27 AM | Last Updated : 03rd October 2020 12:27 AM | அ+அ அ- |

தென்காசி, அக். 2: தென்காசி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவா், மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, புதுப்பித்தல் இனங்கள் நவ. 10ஆம் தேதிக்குள்ளும், புதிய இனங்களுக்கு நவ.30 ஆம் தேதிக்குள்ளும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிடவேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவ. 15இல் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிச.15-க்கு முன்பும், டிச. 16ஆம் தேதிக்கு முன் தொடங்கும் புதியதற்கான விண்ணப்பங்களை 31. 1. 2021ஆம் தேதிக்கு முன்பும் இணையதளம் மூலமாக கேட்புகளை சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம். இத் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.