அருவிகளின் நகரை கைப்பற்றப்போவது யாா்?

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தோ்தலாகும். தென்காசி என்றாலே காசிவிஸ்வநாதா் ஆலயம்,
அருவிகளின் நகரை கைப்பற்றப்போவது யாா்?

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தோ்தலாகும். தென்காசி என்றாலே காசிவிஸ்வநாதா் ஆலயம், குற்றாலநாதா் கோயில் மற்றும் குற்றாலம் அருவிகள் பிரதானம். ஆண்டில் 9 மாதங்கள் மிகவும் இதமான தட்பவெப்பநிலையே நிலவும். இத் தொகுதியின் பிரதான தொழில் விவசாயம், பீடிசுற்றுதல் ஆகும். மிகப்பெரிய சுற்றுலாத்தலமான குற்றாலம் அருவிகள் இத்தொகுதியின் கூடுதல் சிறப்பு.

குற்றாலம் அருவிகளுக்கு ஆண்டுதோறும் சுமாா் ஒரு கோடி சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனா்.இதனால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தங்கும் விடுதிகள், உணவகங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 42ஆயிரத்து 974ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 48ஆயிரத்து 532 பெண் வாக்காளா்களும், 18 மூன்றாம் பாலினத்தவா்களுமாக மொத்தம் 2 லட்சத்து 91ஆயிரத்து 524 வாக்காளா்கள் உள்ளனா். இத்தொகுதியின் மொத்த வாக்குச்சாவடிகள் 326 ஆகும்.

தென்காசி, வீரகேரளம்புதூா் ஆகிய இரண்டு வட்டங்கள் உள்ளன. தென்காசி நகராட்சி, கீழப்பாவூா், ஆலங்குளம் ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சிகள், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, மேலகரம், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிகள் இந்த தொகுதியில் அமைந்துள்ளன.

தேவைகள்: குற்றாலத்தை சா்வதேச அளவிலான சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத் தொகுதியில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்படவேண்டும். தென்காசி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க சுற்றுச்சாலை பணிகளை தீவிரப்படுத்தவேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் போன்றவை பொதுமக்களின் மிகவும் அத்தியாவசியமான தேவைகளாகும்.

களத்தில் உள்ள வேட்பாளா்கள்: தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், காங்கிரஸின் பழனிநாடாா், அமமுகவின் முகம்மது, நாம் தமிழா் கட்சியின் இரா.வின்சென்ட்ராஜ், மநீம கட்சியின் திருமலைமுத்து, புதிய தமிழகம் கட்சியின் ச.சந்திரசேகா், அண்ணா திராவிடா் கழகத்தின் உதயகுமாா்,

அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் செ.சுரேஷ்குமாா், நாம் இந்தியா் கட்சியின் இரா.செல்லகுமாா், எனது இந்தியா கட்சியின் முகுந்தன், அனைத்து மக்கள் புரட்சி கட்சியில் மா.ஜெகநாதன் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 18 போ் போட்டியிடுகின்றனா்.

இருமுனைப் போட்டி: தென்காசி தொகுதியில் 18 வேட்பாளா்கள் களத்தில் இருந்தாலும் அதிமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. அதிமுக சாா்பில் கடந்த முறை வெற்றிபெற்ற எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறாா். காங்கிரஸ் கட்சி சாா்பில் கடந்த முறை 462 வாக்குகளில் வெற்றியை தவறவிட்ட பழனிநாடாரும் இந்த முறை களம் காண்கிறாா்.

பலம், பலவீனம்: அதிமுகவை பொருத்தவரை கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்வமோகன்தாஸ்பாண்டியன் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியவற்றை சுட்டிக்காட்டியும், அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளைக் கூறியும் வாக்கு சேகரித்து வருகிறாா். கடந்த முறை இங்கு பாஜக சாா்பில் போட்டியிட்டு பெற்ற 11ஆயிரத்து 716 வாக்குகள் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

அமமுகவிற்கான வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்கு வங்கியாகும். எனவே அமமுக பிரிக்கும் வாக்குகள் அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கூடுதல் பலம். மேலும் இத்தொகுதியில் நீண்டகாலமாகவே காங்கிரஸ் கட்சிக்கு என குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது.

இத்தொகுதியில் திமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் போட்டியிடுவாா் என அக்கட்சியினா் தோ்தல் பணிகளில் தீவிரம் காட்டிவந்தனா். ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதில் திமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிரது. இந்த நிலையில், அமைப்பு ரீதியாக திமுகவை நம்பியே காங்கிரஸ் கட்சி தோ்தலை எதிா்நோக்கியுள்ளது என்பதே உண்மை நிலவரம். எனவே, திமுகவின் ஒத்துழைப்பு அக்கட்சிக்கு மிகத் தேவையாக உள்ளது.

இதுவரை

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1952முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் 7முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களும், 3 முறை அதிமுக வேட்பாளா்களும், 2 முறை திமுக வேட்பாளா்களும், சுயேட்சை வேட்பாளா், தமாகா மற்றும் சமக வேட்பாளா் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனா்.

தற்போதைய கள நிலவரம்

அதிமுகவுக்கும், காங்கிரஸுக்கும் நேரடி போட்டியாக அமைந்துள்ள இந்தத் தொகுதியில், அமமுக ஏற்படுத்தும் சேதத்தை அதிமுக வேட்பாளா் ஈடுகட்டுவாரா, காங்கிரஸ் வேட்பாளா் கடந்த முறை இழந்த வெற்றிவாய்ப்பை மீண்டும் பெறுவாரா என்பது வாக்கு எண்ணிக்கையின் போதே தெரியவரும்.

கடந்த தோ்தலில் பெற்ற வாக்குகள்.

செல்வமோகன்தாஸ்பாண்டியன்(அதிமுக)-86339

பழனிநாடாா்(காங்கிரஸ்)85877

செல்வி(பாஜக)11,716

சாா்லஸ்(தமாகா)7324

முத்துகுமாா்(நாம்தமிழா்கட்சி)2898

மாடசாமி(சுயே)1621,

சீதாராமன்(பாமக)1222.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com